பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

ஊரும் பேரும்


இளங்கோயில் என்பது சாசனங்களால் விளங்குகின்றது. திருவேங்கடக் கோட்டத்துக் கடவூர் நாட்டுத் திருச் சொகினூரில் உள்ள இளங்கோயிற் பெருமான் என்பது சாசன வாசகம். இவ்வூரின் பெயர் திருச்சுகனுர் என்றும், சித்திரதானுர் என்றும் சிதைந்து வழங்கும்.10

ஆலக்கோயில்

தொண்டை நாட்டில் ஆலக்கோயில் எனச் சிறந்து விளங்கும் ஆலயங்கள் இரண்டு உண்டு பாடல் பெற்ற திருக்கச்சூரில் அமைந்த ஆலக் கோயில் ஒன்று; மதுராந்தகத்திற்கு அண்மையில் உள்ள ஆலக்கோயில் மற்றொன்று. திருக்கச்சூர் ஆலக் கோயிலைப் பாடினார் சுந்தரர்.

“கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
அறங்கட் டுரைத்த அம்மானே”

என்று கல்லாலின் கீழிருந்து அறமுரைத்த பெருமானை ஆலக்கோயிலிற் கண்டு அகமகிழ்ந்து போற்றினார் சுந்தரர்.

மதுராந்தகத்திற்கு அருகே குளத்தூர்க் கோட்டத்துக் குளத்தூரில் அமைந்த ஆலக்கோயில் பெருஞ்சோழ மன்னரால் பெரிதும் ஆதரிக்கப் பெற்றதாகத் தெரிகின்றது.அநபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்க சோழன் அரும்பாக்கத்தைச் சேர்ந்த சில நிலங்களுக்கு அநபாய நல்லூர் என்று பெயரிட்டு, ஆலக்கோயிலுக்கு அளித்தான்.11 மேலும், வல்ல நாட்டு நென்மலியைச் சேர்ந்த சில நிலங்களுக்குக் குலோத்துங்க சோழன் திருநீற்றுச் சோழ நல்லூர் என்று பெயரிட்டு அக் கோயிலுக்கே வழங்கினான்.12