பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

234


நாளடைவில் அக்கோயிலையுடைய ஊர் திருவாலக் கோயில் என்று அழைக்கப்படுவதாயிற்று. இன்று திருவானக் கோயில் என வழங்குவது இதுவே யாகும்.13

பழைய ஊர்ப் பெயர்கள் மறைந்து கோயிற் பெயர்களால் இக் காலத்தில் வழங்கும் பதிகள் பலவாகும். பாண்டி நாட்டில் பாடல்பெற்ற கானப்பேர் என்னும் ஊர் காளையார் கோயில் ஆயிற்று. ஆப்பனூர், திருவாப்புடையார் கோயில் என அழைக்கப்படுகின்றது. மாணிக்கவாசகரை ஈசன் ஆட்கொண்டருளிய திருப்பெருந்துறை, ஆவுடையார் கோயிலாகத் திகழ்கின்றது. சோழ நாட்டுக் கடம்பந்துறை, கடம்பர் கோயில் எனவும், கடிக்குளம், கற்பகனார் கோயில் எனவும், கடுவாய் நதிக்கரையிலமைந்த புத்தூர், ஆண்டான் கோயில் எனவும் வழங்குகின்றன.

அம்புக்கோயில்

புதுக்கோட்டை நாட்டிலுள்ள அம்புக் கோயில் என்பது ஆதியில் அழும்பில் என்னும் பெயர் பெற்றிருந்தது. கல்வெட்டுக்களிலும் பழந்தொகை நூல்களிலும் குறிக்கப்பட்டுள்ள இவ்வூரில் மாணவிறல் வேள் என்னும் குறுநில மன்னன் அரசாண்டான் என்று மதுரைக்காஞ்சி கூறும். இவ்வூரில் எழுந்த சிவன் கோயில் அழும்பிற் கோயில் என வழங்கலாயிற்று. அழும்பிற் கோயில் அம்புக் கோயில் என மருவிற்று. நாளடைவில் கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்று.

பெரிச்சி கோயில்

இராமநாதபுரம் நாட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் பெரிச்சி கோயில் என்னும் ஊர் ஒன்று உள்ளது. அங்கமைந்த,