பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

ஊரும் பேரும்


பழமையான சிவாலயம் திருமட்டுக்கரை என்னும் பெயரால் சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. அவ் வாலயத்திலுள்ள பெரிய நாச்சியார் என்பது அம்பிகையின் பெயர். அந் நாச்சியார் வழிபாடு சிறப்புற நடைபெறுவதாயிற்று. சோணாடு வழங்கிய சுந்தர பாண்டியன் காலத்துச் சாசனம் ஒன்று பெரிய நாச்சியாருக்கு விதந்து அளித்த நிபந்தத்தை விளக்குகின்றது.16 நாளடைவில் பெரிய நாச்சியார் கோயில் என்று அக்கோயில் பெயர் பெற்றது. அதுவே பெரிச்சி கோயில் என மருவிற்று.

சங்கர நயினார் கோயில்

நெல்லை நாட்டுச் சிறந்த கோயில்களுள் ஒன்று சங்கர நயினார் கோயில். ஆதியில் அது புற்றுக் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று தோற்றுகின்றது. இன்றும் பாமர மக்கள் அதனைப் பாம்புக்கோவில் என்றே வழங்குவர். அங்குள்ள புற்று மருந்து என்னும் திருமண் எவ்வகைப் பிணியையும் தீர்க்க வல்லதென்று கருதப் படுகின்றது .அக்கோயிலையுடைய ஊர் முன்னாளில் இராசபுரம் என வழங்கிற்று. இதனா லேயே இராசை என்னும் பெயர் இலக்கியத்தில் அவ்வூரைக் குறிப்பதாயிற்று. பிற்காலத்தில் கோயிற் பெயரே ஊர்ப் பெயராகக் கொள்ளப் பட்டது.

பூரத்துக் கோயில்

திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலை வட்டத்தில் பூரத்துக் கோயில் என்னும் ஊர் ஒன்று உண்டு. ஊரின் பெயர் கோயிலடியாக வந்ததென்பது வெளிப்படை.ஆதியில் பூலத்தூர் என்று அவ்வூர் பெயர் பெற்றிருந்தது.