பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஊரும் பேரும்

வளத்துக்கும் நதியே சிறந்த சாதனமாக அமைந் திருந்ததென்பது நன்கு விளங்கும்.

கங்கை, கோதாவரி போன்ற பெரிய ஆறுகள் தமிழ் நாட்டில் இல்லை. ஆயினும் சிறிய நதிகளைச் சிறந்த வகையிற் போற்றிய பெருமை தமிழ் நாட்டார்க்கு உரியது. ஆற்று நீரின் அருமை யறிந்த தமிழரது ஆர்வம் அன்னார் நதிகளுக்கு இட்டு வழங்கிய பெயர்களால் அறியப்படும். பாலாறு என்பது ஓர் ஆற்றின் பெயர். அது தொண்டை நாட்டின் வழியாகச் செல்கின்றது. அந்நதியில் தண்ணி சுரக்குமே யன்றிப் பெரும்பாலும் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. இன்னும், நீர்வளம் குறைந்த சேதுநாட்டின் வழியாகச் செல்லும் ஒரு சிறு நதி தேனாறு என்னும் அழகிய பெயர் பெற்றுள்ளது. அதனருகே உள்ள குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள ஈசனைத் தேனாற்று நாயகர் என்று சாசனம் கூறும். சுவையுடைய செழுந்தேனைச் சொட்டுச் சொட்டாக வடித்தெடுத்துப் பயன்படுத்துதல் போன்று இந் நதியின் நீரைத் துளித் துளியாக எடுத்து அந்நாட்டார் பயன் அடைகின்றார்கள். பாலாறு தொண்டை நாட்டிலும், தேனாறு பாண்டி நாட்டிலும் விளங்குதல் போலவே, சேர நாட்டில் நெய்யாறு என்னும் நதி உள்ளது. அந்நதியின் கரையில் அமைந்த ஊர் நெய்யாற்றங்கரை என்று வழங்குவதாகும்.

நெல்லை நாட்டில் உள்ள ஒரு சிறு நதியின் பெருமையை வியந்து கருணையாறு என்று அதற்குப் பெயரிட்டுள்ளார்கள். தென்னார்க்காட்டில் விருத்தாசலத்தின்