பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

ஊரும் பேரும்


இன்னும், இறைவன் அமர்ந்தருளும் பள்ளிகளுள் சிலவற்றைத் தொகுத்துப் பாடியுள்ளார் திருஞான சம்பந்தர்.

“அறப்பள்ளி அகத்தியான் பள்ளி வெள்ளைப் பொடியூசி நீறணிவான் அமர் காட்டுப்பள்ளி”

என்பது அவர் திருவாக்கு.

அகத்தியான் பள்ளி

வேதாரண்யம் என்னும் திருமறைக் காட்டுக்குத் தென்பாலுள்ளது அகத்தியான் பள்ளி. அகத்திய முனிவர் ஈசனை வழிப்ட்டுப் பேறு பெற்ற இடம் அப்பள்ளி என்பர். அம்முனிவரது வடிவம் திருக் கோயிலிற் காணப்படுதல் அதற்கொரு சான்றாகும். "மாமயில் ஆலும் சோலை சூழ் அகத்தி யான் பள்ளி" யென்று தேவாரம் பாடுதலால், அழகிய பொழில் சூழ்ந்த தலத்தில் ஆண்டவன் கோயில் கொண்டிருந்தான் என்பது விளங்குகின்றது. இக் காலத்தில் கோயிற் பெயர் ஊர்ப் பெயராகவும் வழங்கும்.

கீழைத் திருக்காட்டுப்பள்ளி

காட்டுப்பள்ளி யென்னும் பெயருடைய தலங்கள் இரண்டு உள்ளன. ஒன்று காவிரியாறு கடலிற்பாயும் இடத்திற்கு அணித்ததாக உள்ளது.

“பலபல வாய்த்தலை யார்த்து மண்டிப்
பாய்ந்திழி காவிரிப் பாங்களின்வாய்க்
கலகல நின்றதி ருங்கழலான்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி"

என்று அதன் வளத்தைக் குறித்தருளினார் திருஞான சம்பந்தர். பாடல் பெற்ற திருவெண் காட்டுக்கு மேற்கே ஒரு மைல் துரத்திலுள்ள இக்காட்டுப்பள்ளி, இப்பொழுது ஆரணியேசுரர் கோயிலென வழங்குகின்றது.