பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

261


கேச்சுரம் என்பர். அக் கோயில் ஒரு கல்லால் மூடப் பட்டிருக்கின்றது.

“இப்பெரும் பிலத்தில் அநாதியாய் உமையோடு
இலங்கொளி ஆடகேச் சுரப்பேர்
ஒப்பிலா மூர்த்தி உலக மெல்லாம் உய்ய
ஊழிதோ றுழிவிற் றிருக்கும்”

என்று திருவாரூர்ப் புராணம் கூறும்.11 எனவே, ஆட கேச்சுரம் என்பது திருவாரூர்ப் பூங்கோயிலில் உள்ள நாகபிலமே யாகும்.

அகத்தீச்சுரம்

நாஞ்சில் நாட்டில் கன்னியா குமரிக்கு அண்மையில் அகத்தீச்சுரம் என்னும் ஊர் காணப்படுகின்றது. ஆலயத்தின் பெயரே ஊர்ப் பெயராயிற் றென்பது தேற்றம். அக்கோயிலில் உள்ள கல்வெட்டில் குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீஸ்வரமுடைய மாதேவன் என வரும் தொடரால் குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும்,அகஸ்தீசுரம் என்பது ஆலயத்தின் பெயராகவும் கொள்ளலாகும். குலோத்துங்க சோழன் அகத்தீச்சுரமுடைய ஈசனார்க்கு வழங்கிய நிவந்தம் அச்சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.12

அயனீச்சுரம்

வட ஆர்க்காட்டு நாட்டிலே வழுவூர் என்னும் ஊர் உண்டு. அவ்வூரில் அமைந்த பழமையான கோயிலின் பெயர் அயனிச்சுரம் ஆகும். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திரு அயனிச்சுரக் கோவிலிற் பழுது பார்ப்பதற்காகவும், பூசனை நிகழ்வதற்காகவும் சாம்புவராயர் என்பார் தேவ தானமாக அளித்த நிவந்தம் கல்வெட்டிற் காணப்படுகின்றது.13 எனவே, அயனீச்சுரம் என்பது வழுவூர்த் திருக்கோயில் ஆகும்.