பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

ஊரும் பேரும்

தென்று கூறுவர். ஆயினும், அவ்வாற்றின் பழம் பெயர் கயத்தாறு என்று தெரிகின்றது. கயம் என்பது ஆழமான நீர்நிலை. அத்தகைய நீர்நிலைக்கு ஆதாரமாய் ஓர் ஊற்றினின்றும் புறப்படுகின்ற ஆற்றைக் கயத்தாறு என்று அழைத்தார்கள். பெரும்பாலும் தென்னாட்டில் உள்ள நதிகள் மலைகளிலே பிறக்கும். அவ்வாறு பிறவாமல் சமவெளியாம் முல்லை நிலத்தில் தன்னுற்றாகப் பொங்கி எழுந்து, கயமாகப் பெருகிச் சிறு ஆறாக ஓடும் சிறப்பினைக் கண்டு, அதற்குக் கயத்தாறு என்று முன்னையோர் பெயரிட்டார்கள். இந் நாளில் அப்பெயர் ஆற்றின் பெயராக வழங்காவிடினும் அவ்வாற்றங் கரையிலுள்ள கயத்தாறு என்ற ஊரின் பெயராகக் காணப்படுகின்றது.

ஆற்றின் அருகே யமைந்த ஊர் ஆற்றுார் எனப்படும். தமிழ் நாட்டில் ஆற்றூர் என்ற பெயருடைய ஊர்கள் பல உண்டு. சேலம் நாட்டில் ஆற்றூர் என்பது ஒரு பகுதியின் பெயராக வழங்குகின்றது. ஆற்றங்கரை யென்பது இராமநாதபுரத்திலுள்ள ஓர் ஊரின் பெயர். தஞ்சை நாட்டில்’ ஆற்றுப் பாக்கமும், திருச்சி நாட்டில் ஆற்றுக் குறிச்சியும், வட ஆர்க்காட்டில் ஆற்றுக் குப்பமும் உள்ளன.

துறை

ஆறுகளில் மக்கள் இறங்கி நீராடுதற்கேற்ற இடங்கள் துறை எனப்படும்.தமிழ் நாட்டில் ஆற்றை அடுத்துள்ள சில ஊர்கள் துறை என்னும் பெயரைத் தாங்கி நிற்கக் காணலாம். சில துறைகளின் இயற்கையழகு அவற்றின் பெயரால் விளங்குகின்றது. காவிரியாற்றின் இரு மருங்கும் அமைந்த செழுஞ் சோலைகளில் மயில்கள் தோகை