பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

285


ஊரில் உள்ள சிவாலயம் சுயம்பு நாதர் கோயில் என வழங்குகின்றது.4

அவிநாசி

இறைவனுடைய திரு நாமமே ஊர்ப் பெயராதலும் உண்டு. கொங்கு நாட்டில் இன்று அவிநாசி யென்று வழங்கும் ஊரின் பழம் பெயர் தேவாரத்தால் விளங்கும். அங்கு முதலை வாயினின்றும் ஒரு பாலனை மீட்பதற்காகச் சுந்தரர் பாடிய திருப்பாசுரத்தில்,

“புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே”

என்று வேண்டுதலால் புக்கொளியூர் என்பது அவ்வூரின் பெயர் என்பதும், அவிநாசி யென்பது ஆண்டவன் திருநாமம் என்பதும், தெளிவாகத் தெரிகின்றன.5 நாளடைவில் ஊர்ப் பெயர் வழக்கா றிழந்துவிட்டது. அவிநாசி யென்பது ஊர்ப் பெயராயிற்று.

திருக்கோளிலி

இவ்வாறே, திருவாரூருக்குத் தென்கிழக்கே அமைந்த திருக்கோளிலி என்ற ஊரின் பெயரும் இறைவன் பெயராகவே தோற்று கின்றது. கேடில்லாத பரம்பொருளைக் கோளிலி என்னும் சொல் குறிப்பதாகும். அவிநாசி யென்ற வடசொல்லுக்கும், கோளிலி யென்ற தமிழ்ச் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. இந்த நாளில் திருக்கோளிலி என்பது திருக் குவளை யெனச் சிதைந்து வழங்குகின்றது.

ஒக்கணாபுரம்

வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்தில் ஒக்கனாபுரம் என்றும், வக்கணாபுரம் என்றும் வழங்கும் ஊர் ஒன்று