பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாக்கும் ஊர்ப் பெயரும்

தேவாரம் பாடிய மூவருக்கும் சைவ உலகத்தில் அளவிறந்த பெருமை யுண்டு. அவர்கள் திருவாக்குப் பொன் வாக்காகப் போற்றப்படும். இத் தகைய சீர்மையைச் சில ஊர்ப் பெயர்களால் உணரலாகும்.

அழகார்திருப்பத்தூர்

தேவாரப் பாமாலை பெற்ற ஊர்களில் புத்தூர் என்னும் பெயருடைய பதிகள் பல வுண்டு. அவற்றுள் வேற்றுமை தெரிதற் பொருட்டு ஒரு புத்துரைத் திருப்புத்தூர் என்றும், மற்றொரு புத்துரைக் கடுவாய்க்கரைப் புத்தூர் என்றும், பிறிதொரு புத்தூரை அரிசிற்கரைப் புத்தூர் என்றும் தேவாரம் குறிப்பதாயிற்று. அவற்றுள் அரிசிற்கரைப் புத்தூர், அரிசில் ஆற்றங்கரையில் அமைந்ததாகும்.1 கண்ணுக்கினிய செழுஞ் சோலையின் நடுவே நின்ற அவ்வூரை அழகார் திருப்புத்தூர் என்று ஆறு திருப்பாட்டிற் பாடினார் சுந்தரர்.

“அலைக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை
அழகார் திருப்புத்துர் அழகன் நீரே”

என்பது அவர் திருப் பதிகத்தின் முதற் பாட்டு. அத் தேவாரத்தை ஆர்வத்தோடு ஒதிய அன்பர் உள்ளத்தில் அழகார் திருப்புத்தூர் என்னும் தொடர் அழுந்திப் பதிவதாயிற்று. நாளடைவில் அரிசிற் கரைப்புத்தூர் என்ற பெயர் மாறி அழகார் திருப்புத்தூர் என்பது அதன் பெயராயிற்று. அப்பெயர் அழகாதிரிப் புத்தூர் என இந்நாளில் மருவி வழங்கும்.