பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

299


சிந்துபூந்துறை

திருநெல்வேலியின் வழியாகச் செல்லும் பொருநை யாற்றில் உள்ள துறைகளுள் சாலப் பழமை வாய்ந்தது பூந்துறையாகும். திருஞான சம்பந்தர் o தம் தேவாரத்தில் பூந்துறையைப் புகழ்ந்து போற்றியுள்ளார்; நெல்லை யம் பதியில் அவர் கண்களைக் கவர்ந்தது அத் துறை. அதன் இரு மருங்கும் நின்ற நெடுஞ் சோலைகளில் நன்னிற மலர்கள் நறுமணம் கமழும் நலத்தினையும், மந்திகள் அங்கு மிங்கும் பாய்ந்து மரக் கிளைகளைப் பற்றி உலுப்பும் போது அவற்றி லுள்ள நாண் மலர்கள் அழகிய தேன் துளிகளைச் சிந்தும் தன்மையையும் அறிந்து, அக மகிழ்ந்தார் திருஞான சம்பந்தர். அக் காட்சியை ஒரு திருப் பாசுரத்திலே பாடியருளினார்.

“கந்தமார் தருபொழில்
மந்திகள் பாய்தர மதுத் திவலை
சிந்துபூந் துறைகமழ்
திருநெல் வேலியுறை செல்வர்தாமே”

என்பது அவர் திருவாக்கு. பூவார் சோலையின் இடையே அமைந்த அழகிய துறையை “மதுத்திவலை சிந்து பூந்துறை” என்று அவர் குறித்தார். அப் பாசுரத்தின் ஈற்றடியிலே முத லெடுப்பாகவுள்ள சிந்து பூந்துறை என்ற தொடரையே அத்துறையின் பெயராகக் கொண்டு பொதுமக்கள் வழங்கத் தலைப்பட்டார்கள். இப்போது அத்துறையும், அதன்கண் அமைந்த ஊரும் சிந்துபூந்துறை என்றே அழைக்கப் படுகின்றன.

தூவாய் நயினார் கோயில்

திருவாரூரில் அமைந்த மண்தளி என்னும் பழமையான திருக் கோயில் பாடல் பெற்றதாகும். அத்தளியிற் கோயில் கொண்ட ஈசனை நோக்கி,