பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதிகாசமும் ஊர்ப் பெயரும்

பாரதமும் இராமாயணமும்

நெடுங்காலமாகத் தமிழ் நாட்டில் பாண்டவர் கதையும், இராமகதையும் வீட்டுக் கதைகளாக வழங்கி வருகின்றன. தமிழ் நாட்டு மூவேந்தருள் பாண்டியன் குலம் பஞ்ச பாண்டவரோடு இணைக்கப்பட்டுள்ளது. தீர்த்த யாத்திரை செய்த பார்த்திபன் தென்னாட்டிற் போந்து பாண்டி மன்னன் திருமகளைக் காதலித்து மணந்தான் என்று பழங் கதை கூறுகின்றது. சேர மன்னன் ஒருவன் பாரதப் போர் புரிந்த பெரும் படைக்கு உணவளித்துப் பெருஞ் சோற்றுதியன் சேரலாதன் என்று புகழப்பெற்றான்.

திருவேட்களம்

இத்தகைய கதைகள் தமிழ் நாட்டில் வழங்கி வந்தமையால் பல ஊர்ப் பெயர்களில் பாரதக் கதை இடம் பெற்றது. சிதம்பரத்திற்கு அண்மை யிலுள்ள திருவேட்களம் என்னும் சீரூர் அர்ச்சுனனோடு தொடர்புற்றது. சிவபெருமானிடம் பாசுபதம் பெறக் கருதி நெடுங்காலம் அர்ச்சுனன் வேள்வி செய்த இடமே வேட்களம் என்று பெயர் பெற்றதென்பர். மகாபலிபுரத்திலுள்ள கற்கோயில் ஐந்தும் பஞ்ச பாண்டவ ரதம் என்று குறிக்கப் படுகின்றன.

ஐவர்மலை

பழனி மலைக்கு அருகே அயிரை யென்ற மலை யொன்றுண்டு. அம் மலையில் கொற்றவை யென்னும் தெய்வத்தை அமைத்துப் பழந் தமிழ் மன்னர் வழிபட்டனர்.