பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

327


புரிசை

புரிசை நாட்டுப் புரிசையும் இறைவன் உறையும் இடங்களுள் ஒன்றென்று குறித்தார் சுந்தரர். காஞ்சிபுர வட்டத்தில் உள்ள புரிசை என்னும் பதி சாலப் பழமை வாய்ந்ததாகும்.மணவிற் கோட்டத்தி லுள்ள புரிசை நாட்டுப் புரிசை என்று சாசனம் இவ்வூரைக் குறிக்கின்றது.23 திருப்படக் காடு என்னும் பெயரால் விளங்கிய புரிசைக் கோயில் தமிழரசரது ஆதரவைப் பெற்றிருந்தது. ஆதலால், புரிசையில் அமர்ந்த படக் காடுடைய பரம னையே சுந்தரர் குறித்தார் என்று கருதுதல் பொருந்தும்.

பழையனூர்

‘தொண்டை நன்னாடு சான்றேர் உடைத்து' என்னும் வாய்மொழிக்குச் சான்றாக நிற்பது பழையனுர் ஆகும். இச்சிற்றூரில் வாழ்ந்த வேளாளர் எழுபதின்மரும் வழிப்போக்கனாகிய வணிகன் ஒருவனுக்குக் கொடுத்த வாக்குப் பிழையாமல் தீப்பாய்ந்து உயிர் துறந்த சீலம் தமிழ் நாட்டில் நெடுங்கதையாக நிலவுகின்றது. திருவாலங் காட்டுக்கும் பழையனுருக்கும் இடையேயுள்ள குட்டைக் கரையில் காணப்படுகின்ற சதுரக் கோயிலிலே செதுக்கப்பட்டுள்ள உருவங்கள், அச்சத்திய சீலரின் ஞாபகச் சின்னம் என்று சொல்லப்படுகின்றன. பழனையென்று திருநாவுக்கரசர் பாசுரத்திற் குறிக்கப்பட்ட பழையனுரில் கொழுந்தீசர் கோயில் என்னும் பழமையான ஆலயம் உள்ளது. ஊருக்குக் கிழக்கே கைலாச நாதர் கோயிலும் உண்டு. ஆதலால், திருவாலங் காட்டுக்கு அணித்தாகவுள்ள பழையனுரும் வைப்புத் தலங்களுள் ஒன்றாகும்.