பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

335


மங்கலம்

நன்மையானவற்றை யெல்லாம் மங்கலம் என்னும் சொல் குறிப்பதாகும். தமிழ்நாட்டில் பல ஊர்ப் பெயர்களில் மங்கலச் சொல் அமைந்திருக்கக் காணலாம். தேவாரப் பாடல் பெற்ற ஊர்களில் ஒன்று திருமங்கலக்குடி. காவிரியாற்றின் வட கரையில், வளமெலாம் வாய்ந்து விளங்கிய அப்பதியைச் "செல்வம் மல்கு திருமங்கலக்குடி” என்று திருநாவுக்கரசர் பாடினார்.

மங்கை

மங்கலம் என்பது மங்கை எனவும் குறுகி வழங்கும். திருவாசகம் பெற்ற பட்ட மங்கையும்,12 தேவாரம் பெற்ற சாத்த மங்கை, புள்ள மங்கை, விசய மங்கை என்னும் ஊர்களும், திரு வாய்மொழி பெற்ற வரகுண மங்கையும் இதற்குச் சான்றாகும்.

பிற்காலத்தில் தமிழ் மன்னர்கள் உண்டாக்கிய ஊர்களில் மங்கலப் பேர் இடம் பெற்றது. தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ள திருமங்கலம் இராஜராஜனால் உண்டாக்கப் பட்டதாகும்.13 பாண்டி நாட்டுத் திருமங்கல வட்டத்திலுள்ள விக்கிர மங்கலம், விக்கிரம சோழபுரம் என்று சாசனத்தில் வழங்குகின்றது.14 இன்னோரன்ன மங்கலங்கள் தமிழகத்தில் பல உண்டு.

சதுர்வேதி மங்கலம்

வேதம் நான்கையும் கற்றுணர்ந்த வேதியர்க்கு விடப் பட்ட ஊர் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. தமிழ் நாட்டு மன்னரும் அவர் தேவியரும் உண்டாக்கிய சதுர்வேதி மங்கலங்கள் பலவாகும்.