பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

ஊரும் பேரும்


பலவுண்டு. தென்னார்க் காட்டிலுள்ள அகரம் ஜனநாத சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப் படுதலால், ஜனநாத சோழன் என்னும் இராச ராசன் அதனை அமைத்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது.23

இராசேந்திரன் என்னும் கங்கை கொண்ட சோழன் தொண்டை நாட்டில் ஓர் அகரம் உண்டாக்கினான்; வானவன் மாதேவி என்னும் தன் தேவியின் பெயரை அவ்வூருக்கு இட்டான்; வானமங்கை என்று வழங்கப் பெற்ற அப் பதியில் பிராமணர்களைக் குடியேற்றினான்.24 அங்குக் கைலாச நாதர் கோவிலும் கட்டினான். இங்ஙனம் கங்கை கொண்ட சோழன் கண்ட நகரம் இன்று செங்கற்பட்டில் அகரம் என்னும் பெயரோடு விளங்குகின்றது.25

செங்கற்பட்டு நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் இரண்டு அகரங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, வானவன் மாதேவியால் உண்டாக்கப்பட்டது.26 மற்றொன்று, பிற்காலத்தில் திம்மப்ப நாயக்கரால் ஏற்பட்டதென்று சாசனம் தெரிவிக்கின்றது. நெல்லிக் குப்பம் முதலிய மூன்று ஊர்களினின்றும், இரண்டாயிரம் குழி நிலத்தைப் பிரித்தெடுத்து அந் நாயக்கர் உண்டாக்கிய அக்கிர காரம் அகரம் என வழங்கலாயிற்று.27

வட ஆர்க்காட்டில் அக்கிரகாரம் என்றும், அக்கிர காரப்பாளையம் என்றும் இரண்டு. ஊர்கள் உள்ளன. நெல்லை நாட்டில் மேலகரமும், திருச்சி நாட்டில் காட்டகரமும் தென்னார்க்காட்டில் புத்தகரமும், வட ஆர்க்காட்டில் கோட்டகரமும் காணப்படும்.