பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

ஊரும் பேரும்


சலசயனம்

மகாபலிபுரத்தில் திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் விளங்குகின்றார். அவ்வூர்க் கடற்கரைக் கோவிலிற் கண்ட சாசனம் ‘ஜலசயனம்’ என்று அக் கோயிலைக் குறிக்கின்றது. ஜலசயனத்துப் பள்ளி கொண்டருளிய தேவர் என்று அச் சாசனம் கூறுதலால் கடலருகேயிருந்த திருமால் கோவில் அப் பெயரால் வழங்கிற் றென்று தெரியலாம்.

தலசயனம்

இனி, திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் உள்ள மற்றொரு கோயிலும் மகாபலிபுரத்தில் உண்டு. அது நகரினுள்ளே காணப்படுகின்றது. அதன் பழமை அங்குள்ள கல்வெட்டுக்களால் விளங்குவதாகும். தல சயனம் என்பது அதன் பெயர். எனவே, மகாபலிபுரத்தில் சலசயனம், தலசயனம் என்ற கோயில்கள் பழமையாகவே சிறப் புற்றிருந்தன என்பது புலனாகும்.3

திருவலவெந்தை

தலசயனத்தில் பூமி தேவியை வலப்பக்கத்தில் வைத்துத் திருமால் காட்சி தருதலால் திருவல வெந்தை என்னும் பெயர் அவர்க்கு அமைந்தது.

“ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான்
வானத்தின் அவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடன்மல்லைத் தலசயனத் துறைகின்ற
ஞானத்தின் ஒளியுருவை நினைவார்என் நாயகமே”

என்று திருமங்கை யாழ்வார் இத் திருக்கோலத்தைப் பாடியருளினார்.