பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

347


திருக்கோவலூர்

இனி, ஐந்தாம் கிருஷ்ண சேஷத்திரம் திருக்கோயிலூர் என வழங்கும் திருக்கோவலூர் ஆகும். வட மொழியில் அவ்வூர் கோபாலபுரம் எனப்படும். கோபாலனாகிய திருமால் எழுந்தருளி யிருக்கும் தலமாதலால் அதற்குக் கோவலூர் என்னும் பெயர் அமைந்த தென்பர். அது கோவல் எனவும் முன்னாளில் வழங்கிற்று.

கண்ணனூர்

இன்னும், கண்ணன் பெயரால் எழுந்த ஊர் திருச்சி நாட்டு முசிரி வட்டத்தில் உண்டு. கண்ணனூர் என வழங்கும் அவ்வூரில் அழகப் பெருமாள் கோயில் விளங்கு கின்றது.

விண்ணகரம்

தமிழ் நாட்டில் ஈசனது கோவில் ஈச்சரம் என்று பெயர் பெற்றாற்போன்று, விஷ்ணுவின் கோவில் விஷ்ணுகிரகம் என வழங்கிற்று. அப்பெயர் விண்ணகரம் என்று மருவிற் றென்பர்.5 வைணவ உலகம் தலைக்கொண்டு போற்றும் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஆறு விண்ணகரங்கள் உள்ளன.

திருவிண்ணகரம்

கும்பகோண்த்திற்கு மூன்று மைல் அளவில் உள்ள திருமால் கோவில் திருவிண்ணகரம் என்று விதந்துரைக்கப்பட்டது.6 ஆழ்வார்களில் நால்வர் அதற்கு மங்களா சாசனம் செய்துள்ளனர்.

“திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன்
தந்தனன் தனதாள் நிழலே"