பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

ஊரும் பேரும்


இங்ஙனம் சிறப்புற்று விளங்கிய வைகைத் திருமலையை அருகதேவனுக்குரிய மலையாகச் சமணர் கருதுவாராயினர். தமிழ் நாட்டின் வடக்கெல்லையிலுள்ள வேங்கடமலை நெடியோன் குன்றம் என்று கூறப்படுதல் போலவும், பொதிய மலை அகத்தியர்மலை என்று குறிக்கப்படுதல் போலவும், அருகதேவன் வீற்றிருந்த திருமலை “எண் இறை திருமலை” என்று கல்வெட்டிற் கொண்டாடப்படு கின்றது. எண்குணன் என்பது அருகனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. எனவே, அருகதேவனுக் குரிய மலைகளுள் மிகச் சிறந்ததாக இத்திருமலை கொள்ளப்பட்டதென்பது இனிது விளங்கும்.8

திருவோத்தூர்

ஆர்க்காட்டு நாட்டில் செய்யாற்றின் வடகரையிலுள்ள திருவத்துர் என்னும் திருவோத்துர் சமண சமயத்தார் சிறந்து வாழ்ந்த தலங்களுள் ஒன்றென்று தெரிகின்றது. அவ்வூரில் சைவத்திற்கும் சமணத்திற்கும் நிகழ்ந்த புனல் வாதத்தில் தோல்வியுற்ற சமணர்கள் பலவகையான கொடுமைகளுக்கு உள்ளாயினர் என்று புராணம் கூறும். இதற்குச்சான்றாக அங்குள்ள சிவாலயச் சுற்றுச் சுவரில் சில சிற்பங்களும் உள்ளன. அழிந்து போன சமணக் கோயிலின் அடிப்படை இன்றும் காணப்படும். ஒத்து என்பது சமண சமயத்தில் வேதத்தைக் குறிப்பதற்குப் பெரிதும் வழங்குகின்ற சொல்லாதலால், வேதப் பெயரைச் சமணர் அவ்வூருக்கு இட்டிருந்தார்கள் என்று தோற்றுகின்றது.