பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

ஊரும் பேரும்


பரிதிக்குன்றம் என்று அம் மலை பெயர் பெற்றுப் பின்பு பருத்திக் குன்றமாயிற் றென்று கருதலும் ஆகும்.14 திருப்பருத்திக் குன்றத்தில் சிறந்து விளங்குவது வர்த்தமான திருக்கோயில்.

அப்பதியில் சீலமும் புலமையும் வாய்ந்த முனிவர் பலர் முன்னாளில் வாழ்ந்தார்கள். அன்னவருள் ஒருவர் வாமன முனிவர். மேரு மந்தர புராணம் என்னும் தமிழ் நூலின் ஆசிரியர் இவரே. “துயதவன் ராசராசன்” என்று வாமனர் போற்றப்பட்டிருத்தலால், தவ நெறியிலே தலை நின்றவர் இவர் என்பது விளங்கும். வட மொழியும் தென் மொழியும் நிலைகண்டுணர்ந்த இம் முனிவர்க்கு மல்லிஷேணர் என்ற பெயரும் உண்டென்று சாசனம் கூறும்.

இவருடைய மாணாக்கராகிய புஷ்பசேன முனிவர், சீலமும் புகழும் வாய்ந்து விளங்கினார். முனி புங்கவன் என்றும், பரவாதி மல்லன் என்றும் சாசனங்கள் கூறுமாற்றால் இவருடைய தவப்பெருமையும் வாதத் திறமையும் இனிது அறியப்படும். அக் காலத்தில் விஜய நகர அரசாங்கத்தில் படைத் தலைவராகவும், மந்திரத் தலைவராகவும் அமர்ந்து, ஆன்ற சிறப்புடன் வாழ்ந்த இருகப்பர் என்பவர் இம் முனிவரிடம் மிகவும் ஈடுபட்டிருந்தார். இவர் ஆணையைச் சிரமேற் கொண்டு ஒழுகினார்; திருப்பருத்திக் குன்றத்தில் இருகப்பர் கட்டிய சங்கீத மண்டபம் இன்றும் காணப்படுகின்றது. விஜய நகர மன்னரது ஆன்ம நலத்தின் பொருட்டு மகேந்திர மங்கலம் என்னும் ஊரைத் திருப்பருத்திக் குன்றத்து நாயனார்க்கு இவர் வழங்கினார்.15