பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

363


திருக்கோயிலின் மருங்கே பழமையான குராமர மொன்று உள்ளது. “தென் பருத்திக் குன்றமர்ந்த கொங்கார் தருமக்குரா” என்று புகழப்படுகின்ற அத்தருவின் அடியில் முனிவர் மூவர் அமர்ந்து நெடுந்தவம் முயன்றனர் என்று சாசனம் கூறும்.16 அம் மரம் இன்றும் தெய்வத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

முன்னாளில் காஞ்சியில் வாழ்ந்தவரும், பெளத்தரை வாதில் வென்று ஈழநாட்டிற்கு ஓட்டியவருமாகிய அகளங்கன் என்னும் சமண முனிவர் பெருமை, திருப்பருத்திக் குன்றத்தில் கர்ண பரம்பரையாக வழங்குகின்றது. அவருக்குப் பின்பு வந்த முனிவர்கள் பலரெனினும் சிலரைப் பற்றிய செய்தியே இப்பொழுது கிடைத்திருக்கின்றது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில், சந்திர கீர்த்தி யென்ற முனிவரும், அவர் மாணாக்கராகிய அனந்த வீரியரும் திருப்பருத்திக் குன்றத்தில் விளங்கினர். எனவே, கல்வியே கரையிலாத காஞ்சிமா நகரம் என்ற புகழுரைக்குச் சான்றாக நின்ற சமண காஞ்சியில் ஆன்றோர் பலர் வாழ்ந்தனர் என்பது நன்கு அறியப்படும்.

திருப்பறம்பூர்

காஞ்சிபுரத்திற்குப் பத்து மைல் அளவிலுள்ள திருப்பறம்பூரில் பாடல் பெற்ற ஒரு ஜினாலயம் உள்ளது. பெளத்தரை வாதில் வென்று பெரும் புகழ் பெற்ற அகளங்கன் என்னும் முனிவர் அங்குள்ள முனி கிரியில் தவம் புரிந்து மேம்பட்டார் என்று வரலாறு கூறுகின்றது. இன்றும் அவ்வூரில் சமணர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.