பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

367


என்னும் சாக்கிய அறிஞன் அவ்வூர்ச் சத்திர மண்டபத்தில் திருஞான சம்பந்தரோடு வாது செய்து தோற்றான் என்றும் பெரிய புராணத்திலே கூறப்படுகின்றது. இவ் வரலாற்றால் ஏழாம் நூற்றாண்டில் புத்தர்கள் போதி மங்கை முதலிய ஊர்களில் சிறந்து வாழ்ந்தனர் என்பதும், அவர்களுள் கலை பயில் தெளிவும் கட்டுரை வன்மையும் உடையார் பலர் இருந்தனர் என்பதும் நன்கு விளங்கும்.

அறப்பணஞ்சேரி

ஐம்பெருங்காவியங்களுள் ஒன்றாகிய மணிமேகலையில் அறவண அடிகள் என்னும் பெளத்த முனிவரின் பெருமை விரிந்துரைக்கப் படுகின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த புத்த சங்கத்தைச் சேர்ந்தவர் இம்முனிவர். மதுரையம்பதியில் கோவலன் கொலையுண் டிறந்ததை அறிந்து அருந்துயரடைந்த மாதவி இவரைச் சரணடைந்து தவ நெறியை மேற்கொண்டாள்.

“மறவண நீத்த மாசறு கேள்வி
அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து”

தன் ஆற்றாமையை அறிவித்த மாதவிக்கு அடிகள் ஐவகைச் சீலத் தமைதியும் காட்டி உய்வகை உணர்த்தினார் என்று மணிமேகலை கூறும்.20

காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்ட பின்பு இவர் காஞ்சி மாநகரம் போந்து நெடுங்காலம் தவம் புரிந்தார். காஞ்சிபுரத்தில் இன்றும் இவர் வாழ்ந்த இடம் அறப்பணஞ் சேரி என்று வழங்குவதாகும். கொங்கு நாட்டில் அறவண நல்லூர் என்னும் ஊர் உண்டென்று கொங்கு மண்டல ஊர்த் தொகை கூறுகின்றது.21