பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகம்- அன்றும் இன்றும்


இன்னும், சாவக நாடும், அதன் தலைநகரமாகிய நாகபுரமும் மணிமேகலைக் காவியத்தில் குறிக்கப்படுகின்றன.5 தமிழ்நாடு தன்னரசு பெற்றிருந்த போது கடல் சூழ்ந்த பல நாடுகளில் தமிழ்க் கொடி பறந்தது. திக்கெல்லாம் புகழும் திருநாடாகத் தமிழகம் விளங்கிற்று.

“சிங்களம் புட்பகம் சாவகம்-ஆதிய
தீவு பலவினும் சென்றேறி-அங்குத்
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு”

என்று அந்நாட்டைப் புகழ்ந்து மகிழ்ந்தார் பாரதியார்.

இக்காலத்தில் தமிழன்னையின் திருமுடியெனத் திகழ்வது திருவேங்கடமலை. அம்மலையை “மாலவன் குன்றம்” என்பர்.

“நீலத் திரைகடல் ஓரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரியெல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு”

என்று குறுகி நிற்கும் தமிழகத்தின் பெருமையைக் கூறிக் கவிஞர் மகிழ்கின்றார்.

அடிக் குறிப்பு

1.இசை நுணுக்கம் இயற்றிய சிகண்டியார் பாட்டு.

2. சிலப்பதிகாரம், காடு காண் காதை, 19 - 20.

3. Comparative Grammar of Dravidian Language Introduction. P98

4. சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை, 35-36.

5. மணிமேகலை, காதை 14, வரி 74.