பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகமும் நிலமும்

29

பற்று

பற்று என்பது நன்செய் நிலமாகும். அது தென் னாட்டில் பத்து எனவும், வட நாட்டில் பட்டு எனவும் திரிந்து வழங்கும். திருக்கோவிலுக்கு நிவந்தமாக விடப்பட்ட நிலங்களையுடைய ஊர், கோவில் பற்று என்று பெயர் பெறும். இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓர் ஊர் பெருங்கருனைப் பற்று என்று அழைக்கப்படுகின்றது.’ செங்கல்பட்டு என்பது, செங்கழுநீர்ப் பற்று என்னும் அழகிய சொல்லின் சிதைவேயாகும்.சித்துர் நாட்டில் பூத்தலைப் பற்று என்று ஆதியில் பெயர் பெற்றிருந்த ஊர் இப்பொழுது பூதலப்பட்டு என்று வழங்குகின்றது. வடஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்திலுள்ள ஓர் ஊர் தெள்ளாற்றுப்பற்று என்று பெயர் பெற்றது. இப்பொழுது அப்பெயர் தெள்ளாரப்பட்டு என மருவியுள்ளது.

பண்ணை

பண்ணை என்பது வயல்.அச்சொல் சில ஊர்ப் பெயர்களிலே காணப்படுகின்றது. நெல்லை நாட்டில் செந்திலான் பண்ணை என்பது ஓர் ஊரின் பெயர். சாத்துருக்குத் தென் மேற்கே எட்டு மைல் தூரத்தில் ஏழாயிரம் பண்ணையென்னும் ஊர் உள்ளது.

பழனம்,கழனி

பழனம் என்ற சொல்லும் வயலைக் குறிக்கும். தஞ்சை நாட்டில் திருப்பழனம் என்பது பாடல் பெற்ற ஓர் ஊரின் பெயர். அஃது இப்பொழுது திருப்பயணமாயிற்று. இன்னும் வயலைக் குறிக்கும் கழனி என்னும் அழகிய சொல், ஆர்க்காட்டிலுள்ள தென்கழனி,