பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகமும் நிலமும்

37

ஊர் என்றும், மற்றொரு பாகம் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டன. பூம்புகார் நகரத்தின் ஒரு பாகம் மருவூர்ப் பாக்கம் என்றும், மற்றொரு பாகம் பட்டினப்பாக்கம் என்றும் பெயர் பெற்றன. இரண்டும் சேர்ந்தது காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்டது. அவ்வாறே சோழ மண்டலக் கரையிலுள்ள நாகை என்னும் நகரமும் இரு பாகங்களையுடையதாய் இருந்தது. இக்காலத்தில் நாகூர் என்றும், நாகப்பட்டினம் என்றும் வழங்குகின்ற பகுதிகள் முற்காலத்தில் ஒரு நகரின் இரண்டு கூறுகளாகவே கருதப்பட்டன. திருவாரூர் சோழ நாட்டின் தலைநகரமாய்த் திகழ்ந்த காலத்தில், நாகை சிறந்த துறைமுகமாகச் செழித்திருந்தது. கடுவாய் என்னும் ஆற்றுமுகத்தில் அமைந்த அத்துறைமுகத்தைக் கடல் நாகை என்று திருப்பாசுரம் போற்றுகின்றது. அந்நகரில் சைவமும் வைணவமும் பெளத்தமும் சிறந்தோங்கி இருந்தன என்று தெரிகின்றது. நாகையிலுள்ள திருமால் கோவிலைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். காரோணம் என்று புகழ் பெற்ற சிவன் கோவிலைக் குறித்து எழுபது திருப்பாசுரங்கள் தேவாரத்தில் காணப்படுகின்றன. இராஜராஜ சோழன் காலத்து அந் நகரில் பெளத்த சமயத்தார்க்குரிய பெரும் பள்ளிகள் அமைந்திருந்தன என்று சாசனங்களால் அறிகின்றோம். எனவே, கடல் நாகை நானாவித மக்களும் கலந்து வாழ்ந்த சிறந்த நகரமாகக் காட்சி அளித்தது.

இன்னும், சேர நாட்டில் சிறந்திருந்த முசிரி என்னும் பட்டினமும் இரு பாகங்களாகவே அமைந்திருந்தது. அவற்றுள் ஊர் என்னும் பெயருடைய பாகம் கொடுங்