பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடும் நகரமும்

53

மாயிற்று. அந்நகரில் அரசு வீற்றிருந்த பல்லவ மன்னர் பெயரால் அமைந்த ஊர்கள் பல்லவபுரம் என்று முன்னாளில் பெயர் பெற்றன. அவை பெரும்பாலும் - பல்லாவரம் என்று இப்பொழுது வழங்கும். சோழ நாட்டை ஆண்ட பெரு மன்னரும் தம்முடைய விருதுப் பெயர்களைப் பல ஊர்களுக்கு அமைத்தார்கள். இராஜராஜ சோழன் உண்டாக்கிய ஊர் ஜெயங்கொண்ட சோழபுரம், அது சில காலம் சோழ நாட்டின் தலைநகராக விளங்கிற்று. ஜெயங் கொண்டான் என்பது இராஜராஜனது பட்டப் பெயர்களில் ஒன்று.

புரம் என்பது புரி எனவும் வழங்கும். சேலம் நாட்டில் தருமபுரி என்னும் ஊர் உள்ளது. தேவாரத்தில் திருநெல்வாயில் என்று குறிக்கப்பட்ட ஊர் இன்று சிவபுரியா யிருக்கின்றது. ஆண்டாள் பிறந்தருளிய ரீவில்லிபுத்தூர் வைணவ உலகத்தில் கோதை புரி என்றும் குறிக்கப்படும். பழனியின் பல பெயர்களில் ஒன்று வையாபுரியாகும்.

தலைநகரங்கள்

வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களுக்கும் உண்டு. முன்னாளில் சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகை படிந்த ஓவியம் போல் பொலிவிழந்திருக்கின்றன. தலைநகரங்கள் பின்னாளில் தோன்றிய சில ஊர்கள் இப்பொழுது பெருமையுற்றுத் திகழ்கின்றன. இவ்வுண்மையை இரண்டொரு சான்றுகளால் அறியலாம்.

உறந்தை

சங்ககாலம் என்று சொல்லப்படுகின்ற பழங்காலத்தில் சோழ நாட்டின் நல்லணியாகச் சிறந்திருந்த நகரம் உறந்தை