பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ஊரும் பேரும்

யாகும். காவிரி யாற்றங்கரையில் உறந்தை என்னும் உறையூர் அமைந்திருந்தது. ஊர் எனப்படுவது உறையூர் எனப் பண்டைப் புலவர்கள் அதனைப் பாராட்டினார்கள். அந்நாளில் திருச்சிராப்பள்ளி ஒரு சிற்றுாராக அதன் அண்மையில் அமர்ந்திருந்தது. நாளடைவில் உறையூரின் பெருமை குறைந்தது; சிராப்பள்ளியின் சீர் ஓங்கிற்று. இப்பொழுது திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டில் ஒரு சிறந்த நகரமாகத் தலை யெடுத்து நிற்கின்றது. பண்டைப் பெருமை வாய்ந்த உறையூர் அதன் அருகே ஒளி மழுங்கி ஒடுங்கிக் கிடக்கின்றது.

கங்கை கொண்ட சோழபுரம்

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பு, சோழ நாட்டின் பெருமை குன்றிலிட்ட விளக்குப்போல் நின்று நிலவிற்று. அறிவும் ஆற்றலும் வாய்ந்த பெருமன்னர் வாழையடி வாழையெனத் தோன்றி, அந் நாட்டின் பெருமையை விளக்கினர். அன்னார் தம் பெயர் விளங்குமாறு புதிய நகரங்களை உண்டாக்கினர். அவற்றுள் ஒன்று கங்கை கொண்ட சோழபுரம். அந் நகரத்தை அழகு படுத்தும் வகையில் கங்கை கொண்ட சோழன் என்னும் இராஜேந்திரன் அளவிறந்த பொருளைச் செலவிட்டான். கோவில் இல்லாத நகரில் நன்மக்கள் குடியிருக்க மாட்டார்கள் என்றறிந்து, அவ்வூரில் பெரியதொரு கோவில் கட்டினான். அக் கோவில் தஞ்சையிலுள்ள பெருங்கோவிலினும் சிறப்புடையதாய் விளங்கிற்று. அந்நாளில் பெருஞ்சீலராய் விளங்கிய கருவூர்த் தேவர் அச்சிவாலயத்தைச் சிறப்பித்துத்