பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

ஊரும் பேரும்

வாயில், புன்னை வாயில், காஞ்சி வாயில் முதலிய ஊர்ப்பெயர்கள் கல்வெட்டுகளிலே காணப்படும்.

கொற்ற வாயில் என்னும் பெயருடைய ஊர்களும் ஆங்காங்கு உள்ளன. மன்னனுக்குரிய மாளிகையின் தலைவாயில், பெரும்பாலும் கொற்ற வாசல் என்னும் பெயரால் குறிக்கப்படுவதாகும். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பெரம்பலூர் வட்டத்தில் கொத்தவாசல் என்ற ஊரும், வடமதுரைக் கருகே கொத்தவாசல் சேரி என்ற சிற்றுரும் உண்டு.

தொண்டை நாட்டில் ஓர் ஊர் பில வாயில் என்று பெயர் பெற்றிருந்தது. நாளடைவில், ஊர் என்னும் சொல் அப் பெயரோடு சேர்ந்து பிலவாயிலூர் என்று ஆயிற்று. அப்பெயர் குறுகி வாயிலூர் என வழங்கிற்று. இந் நாளில் அது வயலூர் எனச் சிதைந்தது. செங்கற்பட்டைச் சேர்ந்த திருவள்ளுர் வட்டத்தில் அவ்வூர் உள்ளது.

முற்றம்

வாயிலைப் போலவே முற்றம் என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம். சங்க இலக்கியத்தில் குளமுற்றம் என்ற ஊர் முற்றம் குறிக்கப்பட்டிருக்கிறது. கோக்குள முற்றத்தைச் சேர்ந்த புலவர் ஒருவர் கோக்குள முற்றனார் என்று பெயர் பெற்றார். கும்பகோணத்துக்கு நான்கு மைல் தூரத்தில் சத்தி முற்றம் என்னும் ஊர் உள்ளது. பழமை வாய்ந்த சத்தி முற்றத்தில் தோன்றிய புலவர் ஒருவர் நாரையைக் குறித்து நல்லதொரு பாட்டிசைத்துத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றார். அவரைச் சத்திமுற்றப் புலவர் என்று தமிழகம் பாராட்டுகின்றது.