பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

குடியும் படையும்

தொழில் தமிழ்நாட்டுப் பழந் தொழில்களில் ஒன்று. பட்டாலும், பருத்தி நூலாலும் கம்பளத்தாலும் நேர்த்தியான ஆடை தொழிலும் நெய்ய வல்ல குலத்தார் காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தனர் என்று. சிலப்பதிகாரம் கூறுகின்றது.19 இன்னோரன்ன தொழில்கள் நிகழ்ந்த இடங்களைச் சில ஊர்ப்பெயர்களால் அறியலாம்.

கூறை என்னும் சொல் ஆடையைக் குறிக்கும். கூறை நெய்யும் தொழில் மிகுதியாக நடைபெற்ற நாடு கூறை நாடு என்று பெயர் பெற்றது.அந்நாடு இப்பொழுது ஒரு சிற்றுாராகக் கொரநாடு என்னும் பெயர் கொண்டு மாயவரத்தின் ஒருசார் அமைந்துள்ளது. நெசவுத் தொழிலைச் செய்யும் வகுப்பார் சாலியர் எனப்படுவர். அன்னார் சிறப்புற்று வாழ்ந்த இடங்கள் ஊர்ப் பெயர்களால் விளங்கும். தஞ்சாவூருக்கு அருகே சாலியமங்கலம் என்னும் ஊர் உள்ளது. அங்கு நெசவுத் தொழில் இன்றும் நடைபெறுகின்றது.

பேட்டை

இங்ஙனம், தொழில்களால் சிறப்புறும் ஊர்கள் பேட்டை எனப்படும். சேலத்தின் மேல்பாகத்தில் செவ்வாய்ப் பேட்டை என்னும் சிற்றுர் உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் சந்தை கூடும் இடமாதலால், அஃது அப்பெயர் பெற்றது என்பர். திருநெல்வேலிக்கு மேற்கே பேட்டை என்ற பெயருடைய ஓர் ஊர் உண்டு. பலவகையான பட்டறைகள் அங்கு இன்றும் காணப்படும்.