பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

ஊரும் பேரும்

ஐரோப்பிய இனத்தவருள் போர்ச்சுகீசியரைத் தமிழ் நாட்டார் பறங்கியர் என்று அழைத்தனர். ஆங்கில வர்த்தகக் கம்பெனியார் இந் நாட்டில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்னமே பறங்கியர் வாணிகம் செய்து வளமுற்றிருந் தனர். அவர்களால் திருத்தப்பட்ட ஊர்களில் ஒன்று தென்னார்க் காட்டிலுள்ள பறங்கிப் பேட்டையாகும். சிங்கப்பூர், சிங்களம் முதலிய நாடுகளோடு கடல் வழியாக வர்த்தகம் செய்யும் சோழ மண்டலத் துறைமுகங்களில் பறங்கிப்பேட்டையும் ஒன்று. ஆடை நெய்தலும், பாய் முடைதலும் அங்கு நடைபெறும் கைத்தொழில்கள்.

சென்னை மாநகரத்தில் சில பேட்டைகள் உண்டு. தண்டையார் பேட்டை, வண்ணார் பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை முதலிய இடங்கள் கைத்தொழிலின் சிறப்பினால் பேட்டை என்று பெயர் பெற்றன. தண்டையார்ப் பேட்டையில் இப்பொழுதும் நெய்யுந்தொழில் நடந்து வருகிறது. கம்பெனியார் காலத்தில் சில குறிப்பிட்ட ஆடை களைக் கைத்தறியின் மூலமாகச் செய்வதற்கென்று ஏற்படுத்தப்பட்ட ஊர் சிந்தாதிரிப்பேட்டையாகும்:

தஞ்சை நாட்டிலுள்ள அய்யம் பேட்டையும், அம்மா பேட்டையும் நெசவுத் தொழிலாளர் நிறைந்த ஊர்கள். அய்யம் பேட்டையில் நூலாடையோடு பட்டாடையும், பாயும் செய்யப்படுகின்றன.

மன்னார் கடற்கரையில் முத்துப் பேட்டை என்னும் ஊர் உளது. கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவர் முன்னாளில் அங்கே சிறந்திருந்தார்கள். முத்து வேலை நிகழ்ந்த இடம்