பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியும் படையும்

74

அத்தகைய சிற்றுார்களில் ஒன்று இப்பொழுது சித்தூர் என்னும் பெயரோடு ஒரு ஜில்லாவின் தலைநகராக விளங்குகின்றது. வட ஆர்க்காட்டில் சிற்றாமூர் என்னும் பெயருடைய ஊர் சமணர்களால் பெரிதும் போற்றப்படுவதாகும். பழைய சிவ ஸ்தலங்களில் ஒன்று சிற்றேமம் என்று பெயர் பெற்றது. அது திரு என்னும் அடை கொண்டு திருச்சிற்றேமம் ஆயிற்று. நாளடைவில் அப்பெயர் திரிந்து திருச்சிற்றம்பலம் என வழங்குகின்றது.

நெடுமையும் குறுமையும்

சில ஊர்களின் நெடுமையும் குறுமையும் அவற்றின் பெயர்களால் அறியப்படும். நெடுங்களம் என்பது தேவாரத்திற் பாடப் பெற்றுள்ள பெரிய நகரம். திருநாவுக்கரசர் அவ்வூரை நெடுங்கள மாநகர் என்று பாடியுள்ளார். அவ்வூரின் பெயர் இப்பொழுது திருநெடுங்குளம் என வழங்கு கின்றது. மாயூரத்துக்கு அருகேயுள்ள நீடூர் என்னும் ஊர் பழங்காலத்தில் பெரியதோர் ஊராக இருந்திருத்தல் வேண்டும் எனத் தோன்றுகிறது. நெல்லை நாட்டிலுள்ள திருப்பதிகளில் ஒன்று குறுங்குடி என்பதாகும். அஃது ஆழ்வாரது மங்களாசாசனம் பெற்றமையால் திருக்குறுங்குடி ஆயிற்று. திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த குறும்புலி யூரிலும், தொண்டை நாட்டுக் குறுங்கோழியூரிலும் குறுமை அமைந்திருக்கக் காண்கிறோம்.

செம்மை,கருமை,வெண்மை

செம்மை, கருமை முதலிய நிறங்கள் சில ஊர்ப் பெயர்களில் விளங்குகின்றன. தஞ்சை நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊர் உள்ளது. செந்நிறக் காட்டின்