பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியும் படையும்

73

திருவெண்காடு, திருவெண்பாக்கம், திருவெள்ளறை முதலியன அவற்றிற்குச் சான்றாகும்.

மேடும் பள்ளமும்

சில குடியிருப்புகளின் தன்மையை அவற்றின் பெயர்கள் அறிவிக்கின்றன. மேட்டில் அமைந்த ஊர்களையும் பள்ளத்தில் அமைந்த ஊர்களையும் அவற்றின் பெயர்களால் உணரலாம். சோழ மண்டலக் கரையில் அமைந்துள்ள கள்ளிமேடு என்னும் ஊர் முற்காலத்தில் கள்ளிகள் அடர்ந்து மேடாக இருந்த இடமென்று தெரிகின்றது. புதுச்சேரிக்கு வடக்கே கடற்கரையில் கூனிமேடு என்னும் ஊர் உள்ளது. இன்னும் சேலத்திலுள்ள மேட்டுரும், நீலகிரியிலுள்ள மேட்டுப் பாளையமும் மேடான இடங்களில் அமைந்த ஊர்களே யாகும்.

திட்டை,திடல் முதலிய சொற்களும் மேட்டைக் குறிப்பனவாம். தஞ்சை நாட்டில் திட்டை என்பது ஓர் ஊர். இன்னும், நடுத்திட்டு, மாளிகைத் திடல், பிள்ளையார் திடல், கருந்திட்டைக்குடி முதலிய ஊர்கள் தஞ்சை நாட்டில் உண்டு.

பள்ளம் என்னும் சொல் பல ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளது. பெரும் பள்ளம், இளம் பள்ளம், ஆலம் பள்ளம், எருக்கம் பள்ளம் முதலிய ஊர்கள் தஞ்சை நாட்டில் உள்ளன. நெல்லை நாட்டிலுள்ள முன்னிப் பள்ளமும், இராமநாதபுரத்திலுள்ள பள்ளத்தூரும் பள்ளத்தாக்கான இடங்களில் அமைந்திருந்த ஊர்கள் போலும்!