பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

ஊரும் பேரும்

வேற்றுமை தெரிதற்காகப் பொன் விளைந்த களத்தூர் என்று அவ்வூரைக் குறித்துள்ளார்கள்.

வெளி

வெளி என்னும் சொல் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றது. நாகபட்டினத்துக்கு அருகே வடக்குவெளி என்னும் ஊர் உண்டு.சங்ககாலத்துப் புலவரில் இருவர், வெளி என்னும் பெயருடைய ஊர்களில் பிறந்ததாகத் தெரிகின்றது. எருமை வெளியனார் என்பது ஒருவர் பெயர். வீரை வெளியனார் என்பது மற்றொருவர் பெயர். அவ் விருவரும் முறையே எருமை வெளியிலும், வீரை வெளியிலும் பிறந்தவரென்பது வெளிப்படை.

அரணும் அமர்க்களமும்

தமிழகத்தில் முன்னாளில் கோட்டை கொத்தளங்கள் பல இருந்தன. அரசனுக்குரிய மனை அரண்மனையென்று அழைக்கப்பட்டது. அரண் அமைந்த சில ஊர்களின் தன்மையை அவற்றின் பெயர்களால் அறியலாம்.

எயில்

எயில் என்னும் சொல் கோட்டையைக் குறிக்கும். ஆகாய வழியாகச் செல்லும் கோட்டை போன்ற விமானங்களைத் 'தூங்கு எயில்' என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது.தொண்டை நாட்டில் பண்டை நாளில் இருந்த இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்று எயில் கோட்டம் என்று பெயர் பெற்றிருந்தது. அக்கோட்டத்திலே தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சி மாநகரம் விளங்கிற்று. அக்காரணத்தால் காஞ்சியை எயிற்பதி என்று சேக்கிழார் குறித்துப் போந்தார். காஞ்சி