பக்கம்:தமிழக ஆட்சி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தமிழக ஆட்சி



கிடைக்கின்றன. பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்த சைவத் திருமுறைகள், சீவக சிந்தாமணி, தக்கயாகப்பரணி, கம்ப ராமாயணம் போன்ற நூல்கள் சோழர் ஆட்சி பற்றிய பல விவரங்களே நமக்குத் தருகின்றன.

சோழர்க்குப் பின் தோன்றிய தனிப் பாடல்கள், திருவிளையாடற் புராணம் போன்ற தல புராணங்கள் என்பவை நாயக்கர் ஆட்சிபற்றிய விவரங்களை ஒரளவு அறியத் துணை புரிகின்றன. நம்பி திருவிளையாடல் காலத்தால் முற்பட்ட தாதலின், பாண்டியர் ஆட்சிபற்றிய செய்திகளை அறிய உதவு கிறது. நாயக்கர் காலத்தில் செய்யப்பெற்ற பரஞ்சோகி திருவிளையாடல் பாண்டியரைப்பற்றிப் பேசுவதாயினும் நாயக்கர் ஆட்சி பற்றிய செய்திகளையே ‘பாண்டியர் ஆட்சி’ என்னும் தலைப்பில் கூறுகின்றதெனக் கொள்வதே பொருத்த மாகும். இங்ஙனம் ஒவ்வொரு கால நூல்களும் அவ்வக்கால ஆட்சி பற்றிய செய்திகளை அறிய ஒரளவு துணை புரிகின்றன.

(2) சமகால இலக்கியம்

புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு என்னும் நூல்களில் வரும் பெரும்பாலான பாக்கள் அந்தந்த அரசர் முன்னிலையிற் பாடப்பட்டவை. சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த அவன் தம்பியாரான இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரம் சமகால இலக்கியமே யாகும். இந்த மூன்று நூல்களிலும் ஆட்சி பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன. அவை: அந்தந்த அரசனே நேரில் வைத்துப் பாடப்பட்டன. ஆதலால், பெரும்பாலும் ஏற்கத்தக்கனவேயாகும்.

பல்லவர் காலத்தில் நந்திக் கலம்பகம் அவ்வாறே பாடப் பட்டது. அதன்கண் நந்தி போத்தரையனுடைய கொடை, புலமை, தண்ணளி, போர்ச் செயல்கள் முதலியன குறிக்கப் பட்டுள்ளன. கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நெடுமாறன்மீது பாடப்பெற்ற பாண்டிக்கோவை அவனுடைய போர்ச் செயல்களையும் பிறவற்றையும் குறித்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/11&oldid=504603" இலிருந்து மீள்விக்கப்பட்டது