பக்கம்:தமிழக ஆட்சி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசுரிமை

25



மகாதானத்தைப் பற்றிய உண்மையை இன்றளவும் தெரிவித்து நிற்றல் காணலாம்.

குடிகளால் பின்பற்றப்படும் சமயங்களைப் பாதுகாத்தல் அரசனது கடமையாகும். அதனுல் தமிழரசர் தம் நாடுகளில் இருந்த பெளத்த, சமண, சைவ, வைணவக் கோவில்களை வளப்படுத்தினர்; புதிய கோவில்களையும் கட்டுவித்தனர். மன்னரைப் பின் பற்றி உயர் அலுவலரும் சிற்றரசரும் பொது மக்களும் அவற்றுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். அக்கால கோவில்கள் கல்விக்கும் சமய வளர்ச்சிக்கும் நிலைக் களங்களாக இருந்தன; அறிவுக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் உரியனவாக இருந்தன. எனவே, அவற்றை வளப்படுத்துதல் அரசனது கடமையாகும். அரசனது சமயம் எதுவாக இருப் பினும், அவன் தன் நாட்டு மக்களை மகிழ்விக்க, எல்லாச் சமயங்கட்கும் உதவியும் காப்பும் அளித்துவந்தான். சங்க காலத் தமிழரசர் இந்திர விழா போன்ற விழாக் காலங்களில் பல சமயவாதிகளையும் வரவேற்றுப் பொது மேடைகளில் பேசச் செய்தனர். அவரவர் விருப்பம்போல எந்த மதத் தையும் பின்பற்றலாம் என்ற உரிமையை அளித்திருந்தனர் என்பதைச் சிலப்பதிகாரம் - மணிமேகலை கொண்டு நன்கறி யலாம். முதல் இராசராச சோழனும் முதல் இராசேந்திர சோழனும், மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள் இவற்றை ஆண்ட அரசனது வேண்டுகோளின்படி நாகையில் இருந்த பெளத்த விஹாரத்திற்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தைத் தானமாக விட்டனர் என்பது இங்கு நினைக்கத்தகும்.

குடிகளுக்குச் சமயத் துறையில் ஆர்வத்தை உண்டாக்க அரசர் கோவில் விழாக்களில் கலந்து கொண்டனர்; பல

1. ‘ தண்மணற் பந்தரும் தாழ்தரும் பொதியிலும்

புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்; ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின்’

-மணிமேகலை, 1, வரி 58-61.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/32&oldid=573554" இலிருந்து மீள்விக்கப்பட்டது