பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 105

57. காசிம் மைதீனுக்கு கோவை மக்கள் கொடை

மைசூர் மன்னர் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் (1734- 1766) காலத்தில் மைசூர் தளவாய்களின் அதிகாரத்திலிருந்து மைசூரை விடுவித்து ஐதர்அலி நாட்டு நிர்வாகத்தை மேற் கொண்டார்.

1765ஆம் ஆண்டு ஐதர்அலி நவாபு பாதர் சாயபு அவர்களின் காரியத்துக்குக் கர்த்தராகக் கோயமுத்தூரில் அட்டவணை, கந்தாசாரம், சுங்கம், பேரம் முதலிய சகல அதிகாரங்களையும் வகித்தவர் குறிக்கார மாதய்யன்.

அவர் காலத்தில் கோயமுத்தூர் அதிகாரிகளும், கணக்கர் முதலிய ஊழியர்களும், குடியானவர்களும் ஆகிய பலரும் ஒன்றாகக் கூடி கோயமுத்தூர்த் தயத்து காசிம் மைதீன் அவர்களுக்கு இரண்டு வள்ளம் தோட்ட நிலமும் (8 ஏக்கர்), ஒரு மா நன்செய் நிலமும் இரண்டு கிணறுகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டது.

கோயமுத்தூர்ப் பேட்டை சாவடி பாரபத்தியம், வெங்கட்ட ரமணய்யர், சேனபோகம் நாகய்யர், கணக்கு அலுவலர் ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர். கோயமுத்தூர் அதிகாரிகளில் எவரும் இஸ்லாமியராக இல்லை என்று இச்செப்பேடு மூலம் தெரிகிறது. கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் பலர் உள்ளனர்.

இந்தத் தருமத்திற்கு எவரேனும் தீங்கு செய்தால் அசுவகத்தி, குருகத்தி, சிசுகத்தி செய்த தோசமும், கங்கைக் கரையில் ஏழு காராம் பசுவைக் கொன்ற தோசமும் வரும் என்றும்,

இசுலாமியர்கள் எவரேனும் தீங்கு செய்தால் மக்கா மதினத்திலே கருஞ்சாதி (பன்றி) கழுத்தை அறுத்துக் கொன்று தின்ற பாவம் கிடைக்கும் என்றும் எழுதப்பட்டுள்ளது.

இந்தத் தருமத்தைப் பரிபாலனம் பண்ணின பேர் கோதானம், பூதானம், கன்னியாதானம் செய்த பயனும் பெற்று, புத்திர சந்தானத்துடன் நெடுங்காலம் வாழ்வார்கள் என்றும் எழுதப் பட்டுள்ளது. இதை எழுதியவர் சித்திரச்சாவடி கணக்குப் பொன்னைய பிள்ளை மகன் செல்லி அண்ணன் என்பவன்.

இச்செப்பேடு கோவைக் கிழார் சி.எம். இராமச்சந்திரச் செட்டியார் அவர்கள் தொகுப்பில் கோவை பேரூராதீனம் சாந்தலிங்கர் திருமடத்தில் உள்ளது.