பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




135

விளங்குகின்றன. இக்கலை இல்லாமல் இங்குள்ள ஊர்த் தெய்வங்களுக்கு விழா நடப்பது இல்லை என்றே கூறலாம். இராமநாதபுரம் மாவட்டத்தின் தென்பகுதியிலுள்ள சில சிற்றூர் களிலும் வில்லுப்பாட்டு நடைபெறுகிறது. ஆனால் கலைஞர்கள் (அவர்களைப் 'புலவர்' என்றே கூறுவர்) நெல்லையிலும் குமரியிலும்தான் மிகுதியாக இருக்கிறார்கள்.

வில்லுப்பாட்டுக்குக் குறைந்தது ஐந்துபேர் வேண்டும். ஏழுபேர் பாடுவது மிகச் சிறப்பாக இருக்கும். வில் கூந்தல் பனங்கம்பு அல்லது மூங்கிலால் சீவிச் செய்யப்பட்டிருக்கும். அதன்மேல் பல வண்ணத் தாள்களை ஒட்டி அழகுபடுத்தி இருப்பர். அதன் இரு முனைகளையும் தோல் அல்லது நரம்பினால் ஆன நாண்கயிற்றால் வளைத்துக் கட்டி இருப்பர். அதில் அடித்ததும் இனிய நாணொலி பிறக்கும். வில்லில் வெங்கலத்தினால் செய்யப்பட்ட இனிய ஒலிமிக்க மணிகளை இடைவெளிவிட்டு ஒரு கம்பியில் கட்டி இணைதிருப்பர். இரண்டு குட்டையான வீசுக் கோல்களைக் கொண்டு வில்லின் நாணில் அடித்ததும் மணிகள் குலுங்கி அசைந்து ஒலிக்கும். வீசுக் கோலிலும் வீசுமணிகளைக் கைப்பிடிக்கு மேல் பொருத்தி யிருப்பர்.

வில்லிசைக்குத் துணையாக உடுக்கு, குடம், தாளம், கட்டை ஆகிய கருவிகள் பயன்படுத்தப்படும். குடத்தின் வாயில் ஒரு பத்தையைத் தட்டியும் குடத்தின் மேல் இடக்கையால் கொட்டி யும் நல்ல தாள ஒலியை எழுப்புவர். பம்பையும் முன்னால் இணைக்கப்பட்டிருந்ததாகக் கூறுவர். இப்பொழுது சிலர் அர்மோனியம், புல்லாங்குழல் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்கின்றனர். இந்தக் கருவிகள் கூட்டொலியும் புலவர்களின் பாட்டொலியும் பாடுகின்ற கதைப் பொருளும் இணைந்து நாட்டுப்புற மக்களைக் கிறுகிறுக்கச் செய்து விடும். அனைவரும் இரவெல்லாம் விழித்து வில்லிசையில் ஒன்றி விடுவதைக் காணக்காண வில்லுப்பாட்டின் உண்மையான சிறப்பும் உயர்வான கலைத்தன்மையும் உள்ளவாறு விளங்கும்.

வில்லின் வலது பக்கம் தலைமைப் பாடகர் வீசுக்கோலும் கையுமாக இருப்பார். அவரை 'மூத்த புலவனார்' அல்லது 'மூத்த பாட்டாளி' என்று கூறுவர். அவர்தான் முதன் முதல் பாடலைப் பாடிவிடுவார். அவருக்குத் துணையாக வலப்புறம் இருப்போரை 'வலத்த பாடுவோர்' என்றும் இடப்புறம் இருந்து