பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

கலைகளில் கலந்து கொள்ளும் ஆண்கள் பெண்கள் ஆகிய கலைஞரைக் கொண்டு ஆண்கள் கலை, பெண்கள் கலை எனவும் பிரிக்க முயலலாம். இரு பாலினரும் கலந்து நிகழ்த்துவதை இருபாலினர் கலை என அழைக்கலாம். காவடி, கடுவாய் ஆட்டம், தேவராட்டம், உடுக்கடிப் பாட்டு போன்றவை ஆண்கள். கலைகளாகும். கரகம், கும்மி, குரவை, தாயாரடித்தல் (மாரடித்தல்) போன்றவை பெண்கள் கலைகளாகக் காணப் படுகின்றன. தெருக்கூத்து, குறவஞ்சி, பள்ளு, போன்றவை இருபாலரும் கலந்து ஈடுபடும் கலைகளாகும். ஆண்கள் கரகம் ஆடுவதையும் பார்க்கிறோம். ஆனால் அது மிக அரிது. பெண் வேடமிட்டு ஆண்களே ஆடும் கணியான் ஆடலைப் புறத் தோற்றங் கருதிப் பெண்கள் ஆடல் என்று கருதுவதே பொருத்த மாகப் படுகிறது. வில்லுப்பாட்டு முன்பு ஆண்களால்தான் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இக்காலத்தில் ஆண்கள் குழு, பெண்கள் குழு, இருபாலினரும் கலந்த குழு என்று மூன்று முறையாக நடத்தப் பெறுகிறது. கோலாட்டம் பெரும்பாலும் பெண்களே கலந்து ஆடினாலும் சில இடங்களில் ஆண்களும் கோலடித்துப் பாடுகின்றனர். இத்தகைய முறையில் பாகுபாடு செய்வது மிக எளிமையானதாகப் படுகிறது.

கலைகள் நடத்தப்படும் காலம், சூழல் ஆகியவற்றைக் கொண்டும், உணர்த்தும் பொருளை நோக்கியும் அவற்றைச் சமூகச் சார்புக் கலைகள், சமயச் சார்புக் கலைகள் என்று இரு வகையாகக் கூறு செய்யலாம். சிலர் இவற்றுடன் போரியல்புக் கலைகள் என்ற ஒரு பிரிவை இணைத்து மூன்றாகக் கூறுவதையும் காணலாம். மனிதனிடம் போராட்டவுணர்வு அவனுடைய சமூக வாழ்வின் அடிப்படையில் தான் தோன்றி இருக்கவேண்டும். சமூக ஏற்றத் தாழ்வும், மாறுபாடுகளும் போராட்டவுணர்வைத் தூண்டும் முக்கிய காரணங்களாகும். சமூக வாழ்வு இல்லையாயின் இவற்றுக்கு இடமே இல்லை. ஆகையினால் போராட்ட உணர்வுக் கலைகள் சமூகக் சிக்கல்களைக் கொண்டே முளையிட்டிருக்க வேண்டும். இக்காரணத்தைக் கொண்டு போராட்டவுணர்வுக் கலைகளைச் சமூக உணர்வுக்

கலை

களுடன் இணைப்பதே பொருத்தமாகப் படுகிறது. இந்தக் கருத்தை ஏற்று கலைகளைச் சமூகம், சமயம் ஆகிய இருபெரும். பிரிவுகளுக்குள் அடக்கப் படுவதே சிறப்பாகத் தோன்றுகிறது.

(1) Projesh Banerji, The Folk Dances of India, Kitabistan; (Allahabad, 1959) P. 5.