பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

அவர்களில்,காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், தம்முடைய புறம் 169வது பாட்டில், பகைவர் மீது படை எடுத்துச் செல்லும் போதும்,படையின் முன் வரிசையில் நிற்பன். பகைப்படைத் தன்னைத் தாக்க வரும் போதும், படையின் முன் வரிசையில் நிற்பன்; படைப் பயிற்சி பெறுவார் எறியும் அம்புகளாலும், வேல்களாலும் பலமுறை தாக்குண்டும் நிலை குலைந்து போகா, முருக்க மரத்தால் செய்யப்பட்ட கம்பமாகிய இலக்கு போல, பகைப் படை எறியும், அம்புகளாலும், வேல்களாலும் தாக்குறினும் நிலைகுலையாதவன்' என அவன் கொற்றத்தை விளங்கப் பாராட்டியுள்ளார்.

எனிலும் அவன் பெயரைக் குறிப்பிடவில்லை. புறம் 169ன் கொளுவில் மட்டுமே அவன் பெயர் பிட்டங் கொற்றன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புறப் 171, பாட்டில், அவன் தன் பால் பரிசில் வேண்டி இரப்பார் பல முறைவரினும், அவர் விரும்புவன அனைத்தையும் அளிப்பன்; ஆகவே,அவன் காலில் முள்ளும் தைத்தல் கூடாது.பரிசிலர் வாழ, அவன் என்றும் வாழ்வனாக,என அவன் கொடை நலத்தைப் பாடியுள்ளார். இப்பாட்டிலும், அவன் பெயரை மூடித்தால் அன்றிக் கொளுவால் மட்டும் அறிய முடிகிறது.

உறையூர் மருத்துவன் தாமோதரனார்,'அவன் மலை நாடாண்டவன். அவன் பெயர் குட்டன்; அவன், பரிசிலர்க்கு எளியவனே அல்லது,பகைவர் எவ்வளவு பெரிய படை கொண்டு எத்துணை முறை வந்து தாக்கினும், கொல்லன் உலைக்களத்தில், சம்மட்டி எத்துணை வலுவாக, எத்தனை முறை தாக்கினும் நிலை குலைந்து போகாப் பட்டடைக் கல் போலும் திண்ணியன் என அவன் கொடை வளம், கொற்றவன்மைகளைப் பாராட்டியதோடு, 'அவனை அணுகாதீர்கள்” என அவன் பகைவர்களை எச்சரித்தும் உள்ளார்.9