பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

2.கரிகாலன், சோழர் பேரரசு ஆண்ட, உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன் என்பதாலும், அத்தந்தை அவன் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டிருக்கக் கூடும் ஆதலாலும், கரிகாலன், இளமைப் பருவத்திலேயே அரசுரிமையைத் தாங்க நேர்ந்தது என்பதில் முரண்பட்டது இல்லை.பேரரசர் இருவர்,வேளிர் பதினொருவர் ஒருங்கே அழிந்துபோக நடைபெற்ற வெண்ணிப் போர், கரிகாலன் சிறையிலிருந்து வெளியேறிப் பகை அழிக்க முனைந்த போர் எனக் கொண்டால், (இயல்பாக அதுவே நடந்திருக்கக் கூடியது) களிற்றைக் கொன்ற புலிக் குருளையை உவமையாகக் கொண்டதிலும் முரண்பாடு இல்லை.

3.கரிகாலன் தமிழ் அரசர் இருவர்களையும் வென்றான் எனப் பொருநராற் றுப்படை கூறியிருப்பது போலவே, பட்டின்ப் பாலையும் கூறியிருக்கிறது. "தென்னவன் • திறல்கெட" என்ற தொடருக்கு முன்னே, "குடவர் கம்ப" என்ற தொடர் வந்திருப்பது காண்க. "குடவர்" என்பார், தமிழகத்தின் மேற்குத்திசைக் காவலர்களாய சேரர் ஆவர். "வஞ்சி முற்றம் வயக்களனாக, அஞ்சா மறவர் ஆட்போர் பழித்துக் கொண்டனை பெரும, குடபுலத்து அதரி"68 என்ற தொடரினைக் காண்க.

யானைக் கண் சேய் மாந்தரஞ் , சேரல் இரும். பொறை என்ற சேர வேந்தன், 'குடவர் கோ' என அழைக்கப்படுதலும் காண்க.69

4.சிலப்ப்திகார ஆசிரியர் இளங்கோவடிகளார்.திருமாவளவனுக்குக் குறைந்தது ஒரு தலைமுறைக்கு மேலே, காலத்தால் பிற்பட்டவர். அதனால், அவன் வாழ்க்கையில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும், அறிந்து கூற அவரால் முடியும். அவ்வாறே கூறியுள்ளார்.