பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

பண்பு நலன்;

பகைவர் செயல்களைப் பொறுத்துக் கொள்வதில் இவன் நிலம் போன்றவன்; சூழ்ச்சித் திறன் அகலத்தால் வானத்தைப் போன்றவன்; வலிமையில் காற்றைப் போன்றவன்; பகைவரை அழிப்பதில் தீப் போன்றவன்; கொடையில் நீரைப் போன்றவன்.

என, தம் கட்டுரையின் 139 ஆம் பக்கத்தில் உதியஞ் சேரலின் பண்புநலனுக்கு மேற்கோளாகக் காட்டிய முரஞ்சியூர் முடிநாகராயரின் புறப் பாடல் வரிகளையே மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.

உதியஞ் சேரலும், சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் இருவரும் வேறு வேறு அல்லர்: ஒருவரே என்பதை உறுதி செய்ய, கட்டுரையாளர், அவ்விரு அரசர்களின் வரலாற்றிற்கும் மேற்கோளாக ஒரே புறப் பாடலை எடுத்தாண்டிருப்பதே போதும். மேலும், அப்புற நானுாற்றுப் பாடலின் கொளுவும் பாட்டுடைத் தலைவ னைக் குறிப்பிடும்போது "சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலர்தன்” எனக் கூறி, உதியஞ் சேரல், சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் இருவரும் ஒருவரே என்பதை உறுதி செய்துள்ளது.

பஞ்ச பாண்டவரா? பாண்டியர் ஐவரா?

"சேரர்" என்ற தலைப்பில் தாம் எழுதியுள்ள கட்டுரையின் 226 ஆம் பக்கத்தில், கட்டுரையாளர், ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள், “ஐவருக்கும், நூற்றுவருக்கும் போர் நடந்தது. ஐவர் என்பவர் பஞ்ச பாண்டவர். நூற்றுவர் என்பவர் துரியோதனன் முதலானோர். இருவருக்கும் நடந்த போர் பாரதப் போர். இப்போரில் ஈடுபட்டவர்களுக்கெல்லாம்