பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

65

"ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது", என்று தான் கொளு குறிப்பிடுகிறது என்பதும், மூலம், "ஆதனுங்கன் போல நீயும். நல்கு மதி" எனக் கூறி, அப்பாட்டுடைத் தலைவன், ஆதனுங்கனின் வேறுபட்ட ஒருவன் என்பதை உறுதி செய்யும் வகையில் தான் அமைந்துள்ளது என்பதும் உண்மை.

பரிசில் பெறும் புலவர், தமக்குப் பரிசில் அளிக்கும் புரவலன் பெயரைத் தம் பாட்டிடைக் கூறி, நேர்முகமாக விளித்துப் பாடுவது ஒரு மரபு. அவனை நேர்முகமாக விளித்துப் பாடாமல், அவன் கொடைப் பெருமையை விளங்கக் கூறி. அவனே போல் நீயும் கொடுப்பாயாக, எனப் பிறிதொரு வரை முன்னிலைப் படுத்திப் பாடுவது பிறிதொரு மரபு. குமணனைப் பெருஞ் சித்திரனார் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் எட்டு. அவற்றில், "இயல் தேர்க் குமண", "படர்வேற் குமண", "நற்போர்க் குமண", என்க் குமணனை முன்னிலைப் படுத்திப் பாடிய பாக்களுக்கிடையே, "நீயும் எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே! குமணன் நல்கிய வளனே" எனத், தம் மனைவியை முன்னிலைப் படுத்திப் பாடிய பாவினையும் பாடியுள்ளார்.

திருவாளர் மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள், குமணனைப் பெருஞ் சித்திரனார் பாடிய பாக்கள் ஆறு: எனக் கொண்டாலும், இந்தப் பாடலைக் குமணனைப் பாடியதாகவே கொண்டுள்ளார். இதன் "கொளு பெருஞ்சித்திரனார், குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது" என்கிறது என்றாலும், இந்தப் பாட்டில், குமணன் புெயர் இடம் பெற்றிருந்தாலும், அவனை முன்னிலைப்படுத்திப் பாடவில்லை. மாறாக, புலவரின் மனைவிதான் முன்னிலைப் படுத்திப் பாடப் பெற்றுள்ளார். ஆகவே குமணன் புகழ்பாடும் பாடல் எனக் கூறும் கொளுத் கூற்று ஏற்புடையதன்று