பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா. கோவி ந்தனார்.

79

பிட்ட ஒரு சோழ அரசனோடு தொடர்பு படுத்தும் செய்தி களையும் ஏற்றுக் கொள்வதில் பெரிதும், விழிப்புடையவ ராக இருக்க வேண்டும்” எனக் கூறுகிறார் என கொளுக்கள் பற்றிய அவர் கொள்கையை அறிவித்துவிட்டு, அதைக் கீழ் வரும் வரிகளால் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

"தொகை நூல்கள் தரும் செய்திகள் பால், இத்தகு கட்டுப்பாட்டினை விதிக்கும் திரு. வெங்கையா அவர்கள், அந்நிகழ்ச்சிகள் நிகழ்ந்ததற்கு, அதிகம் இல்லை என்றா லும், ஐந்து நூற்றாண்டு காலம் கழித்து,பதினொன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டுக்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகளைச் சிறிதும் தயங்காமல் ஏற்றுக் கொள் கிறார்.

"ஏதேனும் ஒரு செய்தி, பனைஒலை ஏடுகளிலோ, அல்லது அதனினும் எளிதாகப் பாழ்பட்டுப் போகும் ஒரு பொருள் மீதோ எழுதப்படாமல்,கல்லின் மீதும், செப்புத் தகட்டின் மீதும் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதனாலேயே, அது முழு நம்பிக்கைக்கு உரியதாம் தகுதியைப் பெற்று விடுமா என்ற வினாவையும், அத்தகு கல்வெட்டுச் செப்பேடுகளில், மிக பெரிய பொய்யான இடைச் செருகல்கள் இடம் பெற்று விடவும், இலக்கிய ஆவணங்களைப் பெயர்த்து எழுதும்படிவங்களில் உண்மையான மரபு வழிச் செய்திகள், அப்படியே இடம் பெற்றுவிடவும் இயலாதா என்ற வினாவையும் எவர் ஒருவரும் எழுப்பக் கூடும்...”

"கல்வெட்டுத் திறனாய்வாளர்களின், இலக்கியச் சான்றுகளை அணுகும் நிலையில் மேற்கொள்ளும் தேவையில்லா விழிப்புணர்வும், கல்வெட்டுச் செப்பேடுகளில் இடம் பெற்றிருக்கும் மிகப்பெரிய பொய்ச் சான்றுகள்பால் காட்டும் சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கையும், அவர்களின் போக்கு குறித்த முறையான ஐயப்பாட்டினை எழுப்புகிறது.