பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

91

ஆக, இவ்வாறெல்லாம் கூறியிருப்பதன் மூலம், கிருஷ்ணனோடு, பலதேவனையும் வழிபடும், வழிபாட்டு நெறி கி.மு. இரண்டாம் நூற்றாண்டில், தமிழகத்திலிருந்து ஆர்மீனியாவுக்குச் சென்றதையும், தமிழ்நாட்டு அரிசி, கருவாப்பட்டை, இஞ்சிவேர், வைடூரியங்கள், கிரேக்க நாட்டிற்குக் கி.மு.500ல் சென்றதையும், அவற்றைக் குறிக்கும் ஒரைஸா', 'கார்பியன்' 'ஜிஞ்சி பெரோஸ்' 'பெரைலோஸ்’ என்ற கிரேக்க மொழிச் சொற்கள் முறையே, அரிசி, கருவா, இஞ்சி வேர், வைடூரி யம் என்ற தமிழ்ச் சொற்களின் திரிபாம் என்பதையும், தமிழ்நாட்டு மயிலும் அகிலும் பாலஸ்தீனத்திற்கு, கி.மு. பத்தாம்.நூற்றாண்டில் சென்றதையும், அவற்றைக் குறிக்கும் 'துக்கி", அகல்' என்ற அம்மொழிச் சொற்கள், தோகை, அகில் என்ற தமிழ்ச் சொற்களின் திரிபாம் என்பதையும், தமிழ்நாட்டு மெல்லிய ஆடை, கிறிஸ்து பிறப்பதற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பாபிலோனியாவிற்குச் சென்றதையும், அதைக் குறிக்கும் “சிந்து" என்ற அம்மொழிச் சொல் 'சிந்து' என்ற தமிழ்ச்சொல்லே என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார் திருவாளர் சீனிவாச அய்யங்கார் என்பது உறுதியாகிறது.

திரு.பி.டி.எஸ். அவக்கள் ஒப்புக்கொண்டு கூறும் வேறு ஒரு வரலாற்றுச் செய்தியையும் ஈண்டு குறிப்பிடல் நலம்.

வேதகாலம் ஏறத்தாழ கி.மு. 3000ல் தொடங்கிய தாகவும், அது, ஒவ்வொன்றும் 500 ஆண்டுகளைக் கொண்டதான மூன்று யுகங்களை உள்ளடக்கியதாகவும் நான் கருது கின்றேன். ஶ்ரீராமச்சந்திரன்,வேதகாலத்தின் மூன்று பகுதிகளில், இரண்டாவது பகுதியில் இருந்தார். ஆகவே அவருடைய காலம் கி.மு. 2000 எனக் கருதுகின்றேன். ஶ்ரீராமருக்கும், ஶ்ரீகிருஷ்ணனுக்கும் இடையில் கடந்து போன காலம் 500 ஆண்டுகள் என்பது ஒரு நல்ல மதிப்பீடு.