பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

காலியல் நெடுந்தேர்க் கைவண் செழியன்
ஆலங் கானத்து அமர்கடந் துயர்த்த
வேலினும் பல்லூழ் மின்னி” அகம். 175


“கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்
சேரல், செம்பியன்,சினங் கெழு திதியன்,
போர்வல் யானைப் பொலம் பூண் எழினி
நார் அரி நயவின் எருமை யூரன்,
.................................
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன்
என்று
எழுவர் நல்வலம் அடங்க, ஒரு பகல்
முரசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெலக்
கொன்று களம் வேட்ட ஞான்றை
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே”
-அகம்-36


“ஆலங் கானத்து அஞ்சுவர இறுத்து
அரசுபட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடுதிறல்உயர் புகழ் வேந்தே”
-மதுரைக் காஞ்சி.127-30


“எழுவுறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிதே”
-அகம்-208


“ஆலங்கானத்து அமர்கடந்தட்ட
கால முன்பநிற் கண்டெனன் வருவல்”
-புறம்.23