பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142


34. எழினி

அதியர் குடிவந்தவன். திருமுது குன்றத்துத் தலைவன் கண்ணன் எழினி என்றும் பெயர் பெற்றவன்73. சோழ மன்னனின் யானை வேட்டையில் துணை செய்யாது போனமையால். சோழன் ஏவிய மத்தி என்பவனால் தோற்கடிக்கப்பட்டவன். மத்தி, எழினியின் பல்லைப் பறித்து 'வெண்மணி' எனும் ஊரின் வாயிற் கதவில் பதித்தான்74.

பாண்டியன் நெடுஞ்செழியனோடு தலையாலங்கானத்தே போரிட்டு அழிந்த எழுவரில் 'போர்வல் யானைப் பொலம் பூண் எழினியும்' ஒருவன், பாடிய புலவர் மாமூலனார்.75

35. எழினியாதன்

வேளிர் வழி வந்தவன். சோணாட்டு வாட்டாற்றுத் தலைவன். வேல் வீரன். மெலிந்தோர்க்குத் துணைவனாகவும், ஆதரவற்றோர்க்கு நண்பனாகவும் விளங்கி அறிவுரை வழங்கியவன். வருவோர்க்கு வரையாது வழங்கிய வள்ளல். பாடியபுலவர் மாங்குடி கிழார்.76

36. ஏற்றை

சேரமான் கணைக்கால் இரும்பொறையின் படைத் தலைவர்களுள் ஒருவன். கழுமலம் எனும் இடத்தே நடந்த போரில் சோழர் படைத் தலைவன் பழையன் என்பானோடு போரிட்டு உயிர் துறந்தவன்.77