பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


யானைப் படைகளை அழித்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற்றவன். வள்ளல் தன்மை வாய்க்கப் பெற்றவன்,86

43. கரும்பனூர் கிழான்

வேங்கட மலையை அடுத்த திருவேங்கடக் கோட்டத்து ஊர்களுள் ஒன்று கரும்பனூர்,87 இயற்கை வளம் நிறைந்த ஊர்.88 அவ்ஊரின் தலைவன் கரும்பனூர்கிழான். நாடி வந்த இரவலர்க்குப் பெருஞ்சோறு அளித்துப் புரந்தவன்89 இரவலர் பலர் அவன் மனையகத்தே பன்னாள் விருந்துண்டு, வறுமை நீங்கி வாழ்ந்தனர். அவர்கள் என்றென்றும் தன் மனையகத்தே. வாழ வேண்டும் என்று விரும்பும் கொடையுள்ளம் கொண்டவன் கரும்பூர்க்கிழான்90

44. கழுவுள்

சேர ஆட்சிக்குட்பட்ட காமூர் என்ற ஊரின் தலைவன் கழுவுள். ஆயர் குலத்தவன். வேற்படை வல்லவன். வள்ளல் தன்மை கொண்டவன். காமூரில், பூதம் தந்த வேங்கை மரம் இருந்தது என்பர் புலவர் மதுரை இளநாகனார்.91

கழுவுள் புகழைக் கண்டு மனம் பொறாத சேர அரசன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை காமூரை முற்றுகையிட்டான். கழுவுள் பணிய மறுத்தான்.