பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

50. சோழிய ஏனாதி திருக்குட்டுவன்

சேரர் குடியான குட்டுவர் குடியில் வந்தவன். சேரநாடு விட்டு, சோணாடு சென்று, சோழன் படையில் பணி மேற்கொண்டான். 'ஏனாதி' என்ற சிறப்புப் பெற்றான். படைத்தலைவனாய் விளங்கி சிறப்புப் பெற்ற திருக்குட்டுவன், பணியினின்றும் ஓய்வு பெற்ற பின் தன்னாட்டகத்ததாய வெண்குடை என்ற ஊர் சென்று வாழத் தொடங்கினான். வள்ளலாக வாழ்ந்து புகழப்பெற்றான்.

புலவர் மாடலன் மதுரைக் குமரனார், வெண்குடை வந்து, திருக்குட்டுவன் தந்தை புகழைப் பாடினார். திருக்குட்டுவன் மன மகிழ்ந்து யானை யொன்றைப் பரிசிலாக அளித்தான். யானையைப் பெற்ற புலவர் அதைக் கண்டு அஞ்சி அதை அவன்பாலே திருப்பி அனுப்பி விட்டார். 'கொடுத்த பரிசில் குறைவோ' என்று எண்ணிய திருக்குட்டுவன் மற்றுமோர் யானையைப் பரிசளித்து புலவர் வறுமையை அகற்றினான்.107

51. தந்துமாறன்

பாண்டியர் பேரரசில் பணி செய்து, அப்பாண்டியர் பெயரை மேற்கொண்டவன். சான்றோர் போற்ற வாழ்ந்தவன். பெருங் கொடை வள்ளலாக வாழ்ந்தவன். சங்க வருண ரென்னும் நாகரையர் என்ற புலவரால் பாராட்டப் பெற்றவன்.108

10