பக்கம்:தமிழக வரலாறு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தமிழக வரலாறு



அவர்தம் பாடலி நகரைக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்றும் அதுகாலை நந்தர் தம் செல்வத்தைக் கங்கைக் கடியில் புதைத்தனர் என்றும் கண்டோம். இதை,

‘பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை

நீர் முதல் சுரந்த நிதியம்’
(அகம். 265)

என அந்த மாமூலனாரே குறிக்கின்றார். எனவே, நந்தர் செல்வம் மிக்கிருந்தவர் என்பதும், அவர் பாடலியைத் தம் தலைநகராகக்கொண்டு வாழ்ந்தனர் என்பதும், புதியராய் வந்த மோரியர் அவர்களை வென்று தம் நாட்டை விரிவாக்கினர் என்பதும், இவர்தம் வருகைக்கு அஞ்சிய நந்தர் தம் பெருஞ்செல்வத்தை மற்றவர் கொள்ளா வகையில் கங்கையுள் புதைத்தனர் என்பதும் தேற்றம்.

மோரியர் தென்னாட்டுப் படையெடுப்பு

இனி, இம்மோரியர் தென்னாட்டுப் படை எடுப்பைப் பற்றித்தான் அறிஞர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஐயம் கொள்ளுகிறார்கள். ‘அவர்கள் ஏன் தென்னாட்டுக்கு வரவேண்டும்? இவர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை. ‘மோரியர்’ என்ற சொல் ‘ஓரியர்’ ஆகவே இருக்க வேண்டும்,’ எனக்காட்டுகின்றார். அது பொருத்தமானதாகுமா? ஓரியர் என்ற வடசொல்லுக்கு “ஊலி” என்ற சொல்லை முதலாகக் கொண்டு அகன்ற நிலப்பரப்பை உடையவர் எனப்பொருள் காண்கிறார். அதற்குப் புறநானூற்றுப் பாடலையும் பொருளையும் கொள்ளுகின்றார். புறம் 175ல் கள்ளில் ஆத்திரையனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/102&oldid=1375654" இலிருந்து மீள்விக்கப்பட்டது