பக்கம்:தமிழக வரலாறு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தமிழக வரலாறு


களும் அன்றைய வாழ்வைக் காட்டுகின்றன. மரத்தினின்று புல்லைப் பிரித்தறியும்-பகுத்துணரும்-அளவுக்கு[1] அவர்தம் அறிவு சென்றதெனில் அவர்கள் உயர்ந்த அறிவறிந்த வாழ்வில் வாழ்ந்தார்கள் என்பதை விளக்கவும் வேண்டுமோ! இனி, நானிலத்திலும் அமையும் மேற்காட்டிய கருப்பொருள்களேயன்றி, பிற பல்வேறு பொருள்களையும் தொல்காப்பியர் காட்டுகிறார். இப்படி ஓரறிவு உயிர் தொடங்கி, ஆறறிவுடைய மனிதன் வரையில் உள்ள வேறுபாடுகளை நுனித்தறிந்து, அவ்வவற்றிற்கு ஏற்ற பெயரிட்டு, அவற்றுடன் மனிதன் கலந்து வாழப் பழகிய ஒரு சிறந்த நாகரிக வாழ்க்கையே தொல்காப்பியர் காலத்து வாழ்க்கை எனலாம்.

தொல்காப்பியர் காலத்து மக்கள் :

இத்தொல்காப்பியர் காலத்து நாடு அரசர்களால் ஆளப்பட்டது என்பது தெளிவு. அரசருக்கு உரிய பொருள்கள் இவை எனவும், அவற்றைக் கொண்டு அவர்கள் எவ்வாறு தரணி ஆண்டு வந்தனர் எனவும் தொல்காப்பியத்தால் நன்கு அறியலாம்.

‘படையும் கொடியும் குடையும் முரசும்
கடைநவில் புரவியும் களிறும் றேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தேர்வுகொள் செங்கோல் அரசர்க்குரிய.’ (மரபு. 71)

என்ற சூத்திரம் அரசருக்கு உரியன எவைஎவை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இனி, அவ்வேந்தரும் அவருக்கு உற்றுழி உதவும் சுற்றத்தாரும் போர்மேற் பிரிவதையும் பிரிந்தால் விருப்புறு மனைவியை விட்டு நீங்க வேண்டியதையும் அகப்பொருள்மேல் சாற்றிக் காட்டுகின்றார்


  1. தொல். மரபியல் சூ. 85.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/120&oldid=1357988" இலிருந்து மீள்விக்கப்பட்டது