பக்கம்:தமிழக வரலாறு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத் தமிழகம்

119


இனி நாட்டில் அந்தணரும் அரசரும் வணிகரும் வேளாளருமாகிய நால்வகைப் பிரிவுகள் உண்டாகி இருந்ததும், ஒவ்வொருவருக்கும் உரிய தொழில் இன்ன இன்ன என்பதும் காட்டப் பெறுகின்றன. அரசர் நாடாளவும், ‘அந்தணர் நூலே கரகம் முக்கோல் மணையே’ இவை பற்றாகத் தவஞ் செய்யவும், வாணிகர் வாணிகம் செய்யவும், வேளாளர் உழவுத் தொழில் செய்யவும் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். எனவே, தொல்காப்பியர் காலத்தில் நாட்டில் தொழிலால் வேறுபாடு காணும் நிலை உண்டாகி விட்டது என அறிகின்றோம். எனவே, யாதொரு வேறுபாடும் அறியாது தோன்றி வளர்ந்த மனிதன், அந்தக் காலத்துக்கு முன்பே தொழிலால் வேறு படுத்தப்பட்டான் என்பது தெளிவு. இதையே திருவள்ளுவனார்.

‘பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்றொழில் வேற்றுமை யான்.’

என்று பின்னால் கூறினார் எனக் கொள்ளல் தகும்

இனப் பிரிவு ஒரு காலத்தில் மனித வரலாற்றில் தோன்றியிருக்க வேண்டும் என்பதை முன்பு கண்டோம் அந்த இனப் பிரிவின் வழிதான் இந்த நால்வகை வேறுபாடுகளும் தோன்றினவோ என நினைத்தல் வேண்டுவதில்லை. ‘சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்ற குறள் வழி, மக்கள் தொழில்படு முறை கருதி இவ்வாறு பிரிந்து நின்றார்கள் எனக் கொள்ளலாம். ஆரியர் சிந்து கங்கைச் சமவெளிக்கு வந்து வாழ்ந்த காலத்தில் இவ்வாறு நால்வகைப் பிரிவினைத் தொழில் கருதி உண்டாக்கிக் கொண்டார்கள் என்பர் வரலாற்று ஆசிரியர்கள். இங்கும் அந்த முறையிலேதான் தொழில் வேறுபாடு கருதிப் பிரிவுகள் உண்டாகியிருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/121&oldid=1357995" இலிருந்து மீள்விக்கப்பட்டது