பக்கம்:தமிழக வரலாறு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தமிழக வரலாறு


கின்றனர். ஆகவே, சங்ககாலம் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு காலமாகிவிட்டது. அன்றைய இலக்கியங்கள் வழி அன்று வாழ்ந்த அரசர்களையும், சிற்றரசர்களையும் கண்டு, பின்மக்கள் வாழ்க்கை முறையையும் பிறவற்றையும் அறிந்து மேலே செல்லலாம்.

சோழர் :

சங்க இலக்கியங்களுள் புறநானூறே வரலாற்றை அதிகம் தருகின்றது. பதிற்றுப்பத்து, சேரர் பரம்பரையில் வாழ்ந்த எட்டுச் சேர அரசர்களைப் பற்றிக் கூறுகின்றது. பத்துப்பாட்டால் மூன்று பேரரசரும் சில சிற்றரசரும் நமக்கு அறிமுகமாகின்றனர். மூவேந்தருள் சோழரே அதிகமாக இலக்கியங்களில் பேசப் பெறுகின்றனர். சோழர் பரம்பரையில் சிறந்தவனாய் வாழ்ந்தவன் கரிகாற் பெருவளத்தானேயாவன். இவன் காலத்தைக் கி.பி. 50-95 என வரையறுப்பர் கனகசபைப் பிள்ளை அவர்கள்[1]. ஆயினும், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளல் இயலாது. எனினும் பத்துப் பாட்டுள் இரண்டாம் பாட்டால் அவன் நன்கு புகழப்படுகின்றான். அவன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் எனும் புகார், வளமான துறைமுகப் பட்டினமாய்ச் சிறந்திருந்தது. அப்பட்டின இருப்பையும் வளத்தையும் பிற சிறப்பியல்புகளையும் விளக்குவதே பட்டினப்பாலையாகும். அதைத் தலைநகராகக் கொண்டு கரிகாலன் ஆண்டான். அவன் குளந்தொட்டு வளம் பெருக்கியும் காவிரிக்குக் கரையமைத்தும், இன்னும் பல வழிகளிலும் மக்களுக்கு உதவி செய்தான் என்பர். அக்கரிகாலன் மகள் வயிற்றுப் பேரனே செங்குட்டுவன் என்பர் சிலர். அது ஆராய்வதற்குரிய ஒன்றாகும். அக்கரி-


  1. 1. The Tamils 1800 years age
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/126&oldid=1358343" இலிருந்து மீள்விக்கப்பட்டது